Monday, 10 July 2023

உற்ற துணை……

 எட்டாம் திருமுறை

மாணிக்கவாசகர்  அருளியது

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் பதிகம் 


                              திருஏசறவு

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கிய லால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.

விளக்கம் : 'நாவினால் பேசுமிடத்து இறைவனது புகழைத் தவிர வேறொன்றையும் பேசியறியேன்' என்பார், 'வாக்கியலால் மற்றறியேன் பிற தெய்வம்' என்றார், 'ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது, நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது' என்பார், 'பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றே' என்றார்.

பாடல் 5

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்துருகேன்; ஆயிடினும்,

மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து

உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்

(பொன் தவிசு நாய்க்கு இடும்மாறு அன்றே, நின் பொன் அருளே!)

எம்பிரானே! ஞான நூல்களைப் படித்து அறியேன்; மனம் கசிந்து உருகவும் மாட்டேன்; ஆயினும் வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களைத் துதித்து அறியேன்; அதனால் உன்னுடைய நீண்ட திருவடிகளை வந்து அடைந்து இறுமாப்பு கொண்டு இருந்தேன். அடியேனாகிய எனக்கு உன் பொன் போன்ற திருவருளைப் புரிந்த செயல் நாயினுக்குப் பொன்னாலாகிய ஆசனத்தை இட்டது போலன்றோ?


                                                    உற்ற துணை……    


                                                       பல்லவி                                    

                                    உற்றதுணை நீயன்றே உன் பதம் பணிந்தேன்

                                    மற்றெதுவுமறியேன் வேறு தெய்வம் தொழுதிலேன்

                                                    அனுபல்லவி

                                    கற்றறிந்திலேன் ஞான நூலேதும் பயின்றிலேன்

                                    குற்றம் குறை ஏதுமிலாக் கேசவன் நேசனே

                                                          சரணம்

                                    புற்றுறை ஈசனே பெருந்துறை சிவனே

                                    சற்றும் தகுதியிலா எனக்குன்னருளளித்து

                                    சுற்றி வந்து வாலாட்டும் இந்நாய்க்கு பொன்னிருக்கை

                                    பெற்றுத் தந்ததுன் கருணையன்றி வேறில்லை

                                    

                                                                         

                                    

No comments:

Post a Comment