Friday, 21 July 2023

பாரெங்கும்……

 மிகப் பெரிய உக்கிரமான தவம் செய்தேனோ என்னவோ !! பலப் பிறவிகளாக சேர்த்து வைத்திருந்த, எனக்கு பெரும் சுமையாக இருந்த வினைகளை எல்லாம் இந்த அரங்கன் வேருடன் களைந்தான். அதோடு நில்லாமல் என்னை தனக்கு அன்பு செய்ய வைத்தான். அதோடும் நில்லாமல் என் உள்ளத்தினுள்ளும் புகுந்தான். இன்று தன் அழகை எல்லாம் நான் பருகுமாறு காட்சி அளிக்கிறான். மங்களகரமான ஆரம் திகழும் (சொற்களால் விவரிக்க முடியாத) அவனுடைய மார்பழகு என்னை அடிமை செய்ததே ! (அந்த அழகிற்கே ஆட்பட்டு நான் அடிமையானேன்.)A

#திருப்பாணாழ்வார்_பாசுரம்.

"பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்

கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு

வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே".

  __ திருப்பாணாழ்வார்.


                                        பாரெங்கும்……


                                             பல்லவி 

                       பாரெங்கும் புகழ் விளங்கும் திருவரங்கனவன்

                       ஊர் போற்றும் உத்தமனென் உள்ளம் கவர்ந்தான்

                                           அனுபல்லவி

                       வாரணமாயிரம் சூழ வலம் வந்து

                       ஆரணங்கு கோதையை மணம் புரிந்த மாதவன்

                                                சரணம்

                       பாரமான என் பழவினைப் பயன் நீக்கி

                       கோரமான தவமெதுவும் செய்யாத என்னை

                       ஆரமணிந்த கேசவன் திருமார்பன்

                        நாரணனெனையே ஆட்கொண்டான்

___முற்பிறவிகளில் செய்த வினைகளின் பாரத்தைப் போக்கி,   என்னைக்  குத்தகைக்கு  எடுத்துக் கொண்டான்; அதுமட்டுமின்றி என்  இதயத்துள்ளே புகுந்துவிட்டான்; நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. அரங்கத்து அம்மானின்(ஶ்ரீரங்கநாதரின்) மாலை சூடியிருக்கும் திருமார்பு என்னை ஆட்கொண்டு விட்டதே __ என்று 

ஸ்ரீரங்கநாதரின் திருவருளைப் பற்றி திருப்பாணாழ்வார்  மனமுருகிப் பாடியுள்ளார்.

    #ஓம்நமோநாராயணா 🙏

No comments:

Post a Comment