Saturday, 1 July 2023

உற்றார் சுற்றம்…..

 உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!



                                           உற்றார் சுற்றம்…..


                                                  பல்லவி

                                      உற்றார் சுற்றம் ஊருறவு வேண்டேன்

                                      கற்றாரூரார் பேரெதுவும் வேண்டேன்

                                                       அனுபல்லவி

                                      மற்றெதுவும் வேண்டேன் கேசவன் நேசனே

                                      குற்றாலம் தலத்துறையும் கூத்தனே ஈசனே

                                                        சரணம்

                                     கற்றதும் பெற்றதும் எதுவும் யான் வேண்டேன்

                                     உற்ற துணையும் தோழரும் வேண்டேன்

                                     புற்றிடங்கொண்டானே நமச்சிவாயனே

                                     பற்றினேனுன் பதம் பசு தேடும் கன்று போல்



 குற்றாலத்து அமர்ந்து உறையும் -திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தா - கூத்தப்பெருமானே, உற்றாரை யான் வேண்டேன் - உறவினரை யான் விரும்புவேனல்லேன்; ஊர் வேண்டேன் - வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; பேர் வேண்டேன் - புகழை விரும்புவேன் அல்லேன்; கற்றாரை யான் வேண்டேன் - கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன்; கற்பனவும் இனி அமையும் - கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும்; உன் குரைகழற்கே - உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கே, கற்றாவின் மனம் போல - கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல, கசிந்து உருக வேண்டுவன் - கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன். 

விளக்கம் : கலைஞானத்தின் பயன் அனுபவம் பெறுதலேயாதலின், அதனைப் பெற முயலாது, கலை ஞானத்தை மட்டும் விரும்பிப் பயில்கின்றவர்களை 'வேண்டேன்' என்று கூறினார். அனுபவமே சிறந்தது என்பதாம். இவ்வனுபவம் தமக்குக் கிடைத்துவிட்டமையால், 'கற்பனவும் இனி அமையும்' என்றார். கற்றா - கன்று ஆ, கன்றையுடைய பசு. அது தன் கன்றினை நினைந்து கதறுவது போல, 'நான் உன்னை நினைந்து கதறி உருக வேண்டும்' என்பார், 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்றார்.               

No comments:

Post a Comment