Monday, 31 July 2023

வேழ நடையுடைய ……



                                                   வேழ நடையுடைய ……


                                                         பல்லவி

                                        வேழநடையுடைய வேந்தனை ஶ்ரீ ராமனை

                                        தாழ விழுந்து தாள் பணிந்து துதித்தேன்

                                                       அனுபல்லவி

                                        ஏழை ஜனங்களை வாழும்படிச் செய்பவனை

                                        ஆழ் கடல் நடுவே அரவணையில் துயில்பவனை

                                                            சரணம்

                                        ஈழம் சென்றரக்கன் ராவணனை வதைத்தவனை

                                        தாழம் குடையுடனே காட்சி தந்த வாமனனை

                                        ஊழ் வினைப் பயன் போக்கும் கேசவனை மாதவனை

                                        ஏழேழ் பிறவிக்குமெனைக் காக்க வேண்டுமென

                                        

                                             

       

ஶ்ரீ ராமச்சந்திரனே…..

 ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்

ஜெய்ஸீதாராம்

ஜெய்ஆஞ்ஜநேயா🙏🙏🌺🌺👏👏🌸🌸



                                 ஶ்ரீ ராமச்சந்திரனே…..


                                           பல்லவி

                            ஶ்ரீராமச்சந்திரனை மனமாரத்துதித்தேன்

                            ஆராவமுதனவன் கேசவன் மாதவன்

                                        அனுபல்லவி

                            ஶ்ரீராமச்சந்திரனவனே பரந்தாமன்

                            ஓராயிரம் நாமமுடைய நாராயணன்

                                             சரணம்

                            ஶ்ரீராமச்சந்திரனே தாய் தந்தை குருவெனக்கு

                            ஶ்ரீராமச்சந்திரனே அயோத்தி மாமன்னன்

                            காரார் குழலாள் ஜானகி மணாளன்

                            ஶ்ரீராமச்சந்திரனே என்றென்றுமென் தெய்வம்

கற்பகம் விரும்பும்…..

 பார்த்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!


கற்பகம் விரும்பும்…..


பல்லவி

கற்பகம் விரும்பும் கபாலியைப்பணிந்தேன்

நற்கதி பெறவே நாளும் வேண்டி

அனுபல்லவி

சிற்பரன் சிவன் கேசவன் நேசன்

அற்புத நடம் புரியும் சிதம்பரநாதன்

சரணம்

உற்சவ காலத்தில் நந்தி மேல் பவனிவரும்

கற்பனைக்கெட்டாத பேரழகனவன்

சிற்பர யோகியர் ஞானியர் வணங்கிடும்

பொற்பாதமுடையவன் நற்கதி தருபவன்

 



#விட்டலனைக் #கண்டேன்…….


                   பல்லவி


விட்டலனைக் கண்டேன் ஆனந்தம் கொண்டேன்

சுட்ட செங்கல் மீது நின்று காட்சி தரும் பாண்டுரங்க


              அனுபல்லவி


துட்ட அரக்கரை மாய்த்திடும் மாலவனை

கட்டழகன் கேசவனைத் தாமரை நாபனை


                   சரணம்


பட்ட துயர் போக்கிடும் பரம பதநாதனை

வட்ட நிலவைப் பழிக்கும் முகமுடைய மாதவனை

எட்டெழுத்தானை ஶ்ரீமன் நாராயணனை

மட்டவிழ் மலர் தூவி மலரடி பணிந்தேன்


                              

                                          

                            

Sunday, 30 July 2023

நந்தி தேவனை…..


     நந்தி தேவனை…..


                     பல்லவி

           

  நந்தி தேவனை விடைவாகனனை

  புந்தியில் வைத்துப் போற்றினேன் அனுதினம்


                   அனுபல்லவி


  சந்திரசேகரன் சிவன் நடம்  காணவே

  உந்தி கமலன் கேசவனமர்ந்த


                         சரணம்


  இந்திரன் நரர் சுரர் நான்முகன் நாரதர்

  சுகசனகாதியர் அனைவரும் பணிந்திடும்

  வையச்சேரித் திருத்தலத்திலங்கும்  

  அகச்தீச்வரரின் வாகனமாய் விளங்கும்

  

Saturday, 29 July 2023

#மோதலும்_காதலும்

 


                                #மோதலும்_காதலும்

                       காதல் கொண்டேனுன் மேல் கண்ணபிரானே

                       ஆதலால் வேண்டினேன் அனுதினமுனையே

                       மோதலின்றியெனை ஏற்றுக் கொள்வாயே

                       தீதிலாதவனே திருமாலே கேசவனே


                       பூதலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனே

                       ஆதரவு வேண்டியுனை அடைக்கலமடைந்து

                       பாதம் பணிந்தேன் பரிந்தருள் புரிவாய்

                       வாதம் செய்யாமலெனை ஏற்றுக்கொள்வாயே


                      ஓதக்கடல் நடுவே உறங்கும் மாதவனே     

                      வேதங்களின் பொருளாய் விளங்கும் மதுசூதனனே

                      ஆதியுமந்தமும் அனைத்தும் நீயே

                      யாதவனே எனை நீ ஆண்டருள்வாயே

                     

                                        

                       

பலவிதமாய்……..

 


                                      பலவிதமாய்……..


                                             பல்லவி

                     பலவிதமாய்க் காட்சி தரும் குலமகளே அம்பிகையே       

                     நலமருள்வாயென வேண்டி நானுமுன் பதம் பணிந்தேன்

                                          அனுபல்லவி     

                    உலகெலாம் கொண்டாடும் கேசவன் சோதரியே

                    அலகிலா விளையாடல் பல புரிந்த ஈச்வரியே

                                           சரணம்

                   சுலபமாயரக்கர்களை வதம் செய்த மாயவளே

                   நிலம் நீர் நெருப்பு காற்று வெளியாயிருப்பவளே

                   நிலமகள்,மலைமகள், கலைமகளென்னும்

                   உலக நாயகியே ஶ்ரீலலிதாம்பிகையே

                   

                   

                   

ஆதி சேடன்…….

 


                                                 

                                                  ஆதி சேடன்…….   

                  

                                                        பல்லவி

                                         ஆதிசேடன் மீது துயிலுறும் 

                                         அனந்தசயனனைக் கேசவனைப் பணிந்தேன்

                                                      அனுபல்லவி

                                         மாதினை மார்பினில் வைத்திருக்கும் மாலனை

                                         வேதியரோதிடும் வேதப்பொருளானவனை

                                                          சரணம்

                                         தீதிலாதவனைப் புருஷோத்தமனை

                                         சோதி வடிவானவனை விளக்கொளிப் பெருமாளை

                                         சாதித்த புண்ணியரும் சுகசனகாதியரும்

                                         மேதினியோரனைவரும் போற்றும் நாராயணனை

Friday, 28 July 2023

“ சரணாலயம் “

 

                                       “ சரணாலயம் “

                                 அத்தியாயம் 7  —   “சேகரன்”


    கடைசியாக நாம்  சரணாலயத்தில் செல்லையாவை சந்தித்தது பற்றிப் பார்த்தோம். இன்று நாம் சந்திக்கப் போவது சேகரன். சேகரனை நான் முதல் முதலாகப் பார்த்த அனுபவத்தை மறக்கவே இயலாது. அப்படி அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த சந்திப்பு. ஒரு நாள் நான் சென்னை மாம்பலம் கடைவீதியுன்றில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு கடை வாசலிலே நடைபாதை ஓரமாக ஒரு இளைஞன் நிறைய தாடி மீசயுடன் குட்டிச்சுவற்றில் சாய்ந்து சரிந்து கிடந்தான். அவன் இருந்த நிலை கண்டு மனம் திக்கிட்டது. ஏதோ போதையடைந்தவன் போல தன்னிலை,தன்னினைவின்றிக் கிடந்தான். அருகே சென்று பார்த்தேன்.  அரை குறையாக நினைவிருந்தது. ஆம், ஏதோ ஒரு போதைப் பொருள் சாப்பிட்டிருந்தான். தம்பி தம்பி என்றழைத்தேன். பதில் சொல்லும் நிலையில் அவனில்லை. கையிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து சிறிது தண்ணீரெடுத்து முகத்தில் தெளித்தேன். சற்றே நினைவு வந்தவனாக சுதாரித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தான். யாருப்பா நீ!? ஏன் இங்கே விழுந்து கிடக்கிறாய் என்று கேட்டேன். தீனமான குரலில் ஏதோ சொல்ல முயற்சி செய்தான். ஆனால் குரலெழும்பவில்லை.  ஏதாவது சாப்பிடுகிறாயா!? நான் ஓட்டலுக்குத்தான் போகிறேன்,வா, என்று அருகில் உள்ள உணவகத்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்றேன். அங்கவன் பசியாறினான். பிறகு மெள்ள மெள்ள அவன் கதையைக்கேட்டறிந்தேன். அவன் பெயர் சேகரன். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். பெற்றோருக்கு ஒரே மகன். பெற்றோரிருவருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தவர்கள்.  தந்தை மாநில அரசாங்கத்தில் உயர் உத்தியோகத்திலிருந்தவர். தாய் ஒரு பெரிய வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்தவர். இவனும் நல்ல உயர் கல்வி படித்தவன். அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி படித்து, மாநிலத்தின் முதல் மாணாக்கனாகத் தேறியவன். பிறகு சென்னை M.I.T. யில் மேல் படிப்புப் படித்திருந்தான். பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அமெரிக்காவிலுள்ள Massachusetts Institute ல் மேற்படிப்பு மற்றும் Doctorate பட்டம் பெற்று சிறந்த மாணவனாகத் தேறினான். அதனால் அங்கேயே, Silicon valleyயில், Adobe என்னும் ஒர சாப்ட் வேர் நிறுவனத்தில் உத்தியோகமும் கிடைத்தது. கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என்றாலும் தனிமை அவனுக்கு இனிமையாக இல்லை. அதற்குள்ளாகத் தந்தை உத்தியோக ஓய்வு பெற்று விட்டார். தாயும் வாலண்டறி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு இருவரும் சொந்த கிராமத்தில் செட்டிலாகி இருந்தனர். பெற்றோரை ஒரு முறை அழைத்து வந்து கூட வைத்துக்கொண்டானெனினும் அவர்களுக்கு நிரந்தரமாகத் தங்க விருப்பமில்லை என்று கூறி மீண்டும் சொந்த கிராமத்திற்கே சென்று செட்டிலாகி விட்டனர். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சேகரனுக்கு மணமுடிக்க இயலவில்லை. ஏனோ இந்த நாட்களில் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இப்படி சில ஆண்டுகள் பறந்தன. சேகரனுக்கு மள மளவென உத்தியோக உயர்வு கிடைத்து விட்டது.  பெரிய வீடு, கார்கள்,என வசதிகள் மேலும் மேலும் கிடைத்தது. இந்தக் கட்டத்தில்  அவன் பெற்றோர் கார் விபத்தில் மாண்டனர். கொள்ளி போடக்கூட முடியமலாயிற்று. சில நாட்களுக்குப் பிறகே அவன் சொந்த ஊருக்குப் போக முடிந்தது.  தனியே திரும்பிய சேகரனுக்கோ ஏனோ வாழ்க்கையில் பிடிப்பிலாமல், மன அமைதி இல்லாமலாயிற்று.  ஏனோ அவனுக்கிந்த உல்லாச அமெரிக்க வாழ்க்கை பிடிக்காமல் போயிற்று. அங்குள்ள இஸ்கான்ஸ் (ISKONS) கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தான். அங்கும் அவன் தேடிய மன நிம்மதி அவனுக்குக் கிடைக்கவில்லை. வேலையை உதறிவிட்டு அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சொந்த ஊர் திரும்பினான். அங்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டில் குடியேறினான். வசதிக்கும், காசுக்கும் குறைவில்லாததால், அடிக்கடி கோவில் குளம், மலைவாசஸ்தலம், இறைபணி மன்றங்கள், மடங்கள்,என சுற்றித்திரிந்தான். ஏனோ அவன் மனம் அமைதி பெறவில்லை. அவன் தேடிய நிம்மதி எங்கும் எதிலுமவனுக்குக் கிடைக்கவில்லை. மலைவாசஸ்த்தலங்களில் கிடைத்த சகவாசங்களால் போதைப் பொருள் பழக்கமேற்பட்டது. அடிக்கடி போதைப்பொருட்களைப் பயன் படுத்தத் தொடங்கினான். எனினும் அதனாலும் அவன் தேடிய மன அமைதி ஏனோ அவனுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவனை நான் சந்தித்தேன். ஏனோ அவனுக்கு என் நட்பில்  ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பின் அவன் என்னை அடிக்கடி சந்தித்தான். அவனும் நானுமாக ரமணாச்ரமம், ராமகிருஷ்ணா மடம் என சில இடங்களுக்குச் சென்றோம். நடு நடுவே அவனை நான் போதை அடிமை பழக்கம் நீக்கும் சென்டருக்குக் கூட்டிச்சென்றேன். சில மாதங்களில் நல்ல மாற்றம் உண்டாயிற்று. அவன் அந்தப் பழக்கத்தை அறவே விட்டு விட்டான்.  ஊருக்குச்சென்று சொந்த வீடு நிலம் எல்லாம் விற்று, கிடைத்த தொகையை வங்கியில் வைப்பு நிதியாக வைத்தான். என்ன சொல்லியும் அவனுக்க மண வாழ்வில் ஈடுபாடில்லாமலாயிற்று.  இந்த நிலையில் ஒரு நாள் என்னோடு, சரணாலயம், வந்தான். அங்கு வந்த பின் அது பற்றி நிறைய கேட்டறிந்தான். நானவனை முத்துக்கருப்பன், தெய்வானை தம்பதியருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர்கள் செய்யும் பணியில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தான். நானும் அவனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவித்தேன்.  அவர்களும் அவனங்கு தங்கி அவர்களுக்கு உதவுவதை வரவேற்றனர்.  இதோ பதினொரு ஆண்டுகள் ஓடி விட்டன. சரணாலயத்தில் சேகரன் சேரும் போது அவன் வயது முப்பதியேழு. இதோ இன்று நானவனை சந்திக்கும் போது அவன் வயது நாற்பத்தெட்டு. இன்று சேகரன் பிறந்த நாள். வாழ்த்துக் கூறவும் நலம் விசாரிக்கவுமே அங்கு வந்திருந்தேன்.







            

என்னை சோதிப்பதால்….

 

                                      என்னை சோதிப்பதால்….


                                               பல்லவி

                          என்னை சோதிப்பதால் உனக்கென்ன லாபம்

                          அன்னை கற்பகமே ஆண்டருள்வாயே

                                             அனுபல்லவி

                          சென்ன கேசவன் சோதரியே மாயே

                          பன்னகாபரணன் கபாலீசன் நாயகியே

                                                சரணம்

                         உன்னைப் பணிந்தோரின் ஊழ்வினை களைபவளே

                         முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே

                         தன்னை மிஞ்சியோர் தெய்வமில்லாதவளே

                         சென்னைத்திருமயிலை திருத்தலத்திலுறைபவளே

    

                                               

Wednesday, 26 July 2023

 

கோவிந்தன்

பல்லவி

கோவிந்தன் தரிசனமே தருமே கோடி புண்ணியமே

தேவாதி தேவன் திருவேங்கடமுடையான்

அனுபல்லவி

ஆவினங்கள் மேய்க்கும் அச்சுதன் கேசவன்

தேவி பத்மாவதியின் மனங்கவர் நாயகன்

சரணம்

தூவி மலர் சொரிந்து மனமாரத்துதித்து

சேவடி பணிந்திடும் பக்தருக்கெல்லாம்

ஏவாமலே வந்து மூவாசைப்பிணி போக்கி

தீவினையகற்றி நல்வினையளிப்பவன்

கண்ணனைத் தாலாட்ட……

 


                    கண்ணனைத் தாலாட்ட……


                                     பல்லவி

              கண்ணனைத் தாலாட்ட வாருங்கள் கோபியரே

              வண்ணமுறத் தொட்டிலிலே கிடந்துறங்கக் காத்திருக்கும்             

                                    அனுபல்லவி

              பண்ணிசைத்து தாலாட்டு ப்பாடல்கள் பல பாடி

              மண்ணையுண்டவாயனை மாமாயன் கேசவனை

                                      சரணம்

              ஆலிலை தனிலே ஆனத்தமாய் துயின்ற

              பால கோபாலனை மதுசூதனனை

              காலில் சலங்கையுடன் காளிங்கன் தலைமீது

              கோலாகலமாக நடம் புரிந்த பாலனை


              பூலோக வைகுண்டமெனும் புகழ் விளங்கும்

              சீலமிகு திருவரங்கம் தனிலுறங்குமரங்கனை

              சாலச்சிறந்த திருப்பதியாம் திருமலையில்

              ஞாலமுய்யக் கோயில் கொண்ட திருவேங்கமுடையானை 


              இந்திரலோகத்திலுறங்குமுபேந்திரனை

              சந்திரனைப் பழிக்கும் முகமுடைய முகுந்தனை   

              தந்திரங்கள் பல செய்து வெண்ணையுண்ட வாயனை

              உந்தி கமலனை உலகளந்த பெருமானை  

           

              ஆயிரம் நாவுடைய அனந்தன் மேல் கிடந்துறங்கும்  

              ஆயிரம் நாமங்கள் கொண்ட ஶ்ரீமன் நாராயணனை

              தேயாத புகழ் மேவும் ஶ்ரீராமச் சந்திரனை

              ஆயர் குலவிளக்கை நந்தகோபன் மகனை

        

           

                  

              

              

   


தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன

தூகிரே அச்சுதானந்தன


இந்திரலோகதல்லி உபேந்திர மலக்யானே

இந்துமுகியரல்ல தூகிரே

இந்திரகன்னிகேயரு சந்ததி பந்து

முகுந்தன தொட்டில தூகிரே 


ஆலத எலய மேலே ஸ்ரீலோல மலக்யானே

நீலகுந்தலேயரு தூகிரே

வ்யாலஷயன ஹரி மலகு மலகெந்து

பாலகிருஷ்ணய்யன தூகிரே 


ரங்கனைகிருஷ்ணனைஅச்சுதனைஅனந்தனை தாலாட்டுங்கள் (தூகிரே)

திருப்பதியில் இருக்கும் பாலாஜியை,

காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை

தாலாட்டுங்கள் (தூகிரே)


நாகலோகத்தில் நாராயணன் படுத்திருக்கிறான்

நாககன்னிகைகள் தூங்கச் செய்யுங்கள்

நீளமான கூந்தலையுடைய பெண்கள் தொட்டில்கயிறை பிடித்துக்கொண்டு

வேகமான தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)


இந்திரலோகத்தில் உபேந்திரன் படுத்திருக்கிறான்

சந்திரனைப் போல் முகத்தையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்

இந்திரலோகத்திலுள்ள பெண்கள் உடனே வந்து முகுந்தனின் தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)


ஆலமர இலையில் லக்‌ஷ்மியின் கணவன் நாராயணன் படுத்திருக்கிறான்

நீளமான கூந்தலையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்

ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் ஹரியை

தூங்கு தூங்கு என்று தாலாட்டுங்கள் (தூகிரே)


ஆயிரம் நாமங்கள் கொண்டவனேநீயே அனைவரிலும் உத்தமமானவன் என்றவாறு

ஜபித்துக் கொண்டே தாலாட்டுங்கள்

விஷசர்ப்ப குளத்தில் (காளிந்திசர்ப்பத்தின் மேல் குதித்தாடிய

களங்கமில்லாதவனை தாலாட்டுங்கள் (தூகிரே)


நெற்றியில் ஆபரணமும்கழுத்தில் முத்து மாலையும் அணிந்துள்ள

குழந்தையின் தொட்டிலை தாலாட்டுங்கள்

ஸ்ரீதேவி ரமணனை புரந்தரவிட்டலனை

தூங்கு என்று வேண்டிக் கொண்டு தாலாட்டுங்கள் (தூகிரே)

Tuesday, 25 July 2023

ஆதிவராகன்…..

 

                                                ஆதிவராகன்…..


                                                     பல்லவி

                                    ஆதிவராகன் பாதம் பணிந்தேன்

                                    மேதினியை மீட்ட திருமால் கேசவன்

                                                 அனுபல்லவி

                                    சாதித்த புண்ணியரும் சுகசனகாதியரும்

                                    வேதியரோதும் வேதங்களும் போற்றும்

                                                    சரணம்

                                    மாதினை மார்பினில் வைத்திருக்கும் மாதவன்

                                    சோதி வடிவான ஈசனடி தேடியவன்

                                    பூதலம் உண்டுமிழ்ந்த கண்ணன் யாதவன்

                                    கேதமிலாத ஶ்ரீமன் நாராயணன்                                    

                                    

                                    


நினைத்தவுடன்……

 


                                        நினைத்தவுடன்……


                                                பல்லவி

                       நினைத்தவுடன் கண்ணெதிரில் நீ வர வேண்டுமென

                       உனையே  துதித்தேனென் சென்ன கேசவா

                                              அனுபல்லவி

                       வினைப்பயன் களைந்திட நீயேயென் துணை

                       அனைத்தும் நீயே ஆதிகேசவா

                                              சரணம்

                        தினையளவு உனையே துதித்தாலும் போதும்

                        பனையளவு பலன்களை  அள்ளித்தருபவனே

                        சுனை நீராய்க் கருணை சுரக்கும் திருமாலே

                        எனையாட்கொள்ளும் தருணம் இதுவே                   

                        

கண்கவர் பேரழகி …….

 கஸ்தூரி திலகமும் கெளஸ்துப மாலையும்

சர்வாங்கத்தில் ஹரி சந்தனமும் அணிந்து

நந்தகோபன் குலத்திற்கு மட்டுமல்லாது இந்த புவிக்கே ரத்தினத்தைப்போலத் திகழ்பவனே

உனக்கும் மாதா ஸ்ரீ ரக்குமாயி தாயாருக்கும் என் வந்தனங்கள்🙏

ஶ்ரீ கிருஷ்ண ரத்னம் சுர சேவ்ய ரத்னம்

பஜா மஹே யாதவ வம்ச ரத்னம்

ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய...   



                                         கண்கவர் பேரழகி …….


                                                    பல்லவி

                                   கண் கவர் பேரழகி ருக்மாயி உடனிருக்கும்

                                   பண்டரி புரத்தரசன் விட்டலனைப் பணிந்தேன்                                     

                                                 அனுபல்லவி

                                   அண்ட சராசரங்களனைத்தையும் காக்கும்

                                   புண்டரீகாக்ஷனை புருஷோத்தமனை

                                                       சரணம்

                                   அழகுடன் நெற்றியில் கஸ்தூரி திலகமுடன்

                                   கழுத்திலும் மேனியிலும் களபசந்தன சாற்றுடனும்

                                    நந்தன் குலத்து ரத்தினமாம் கேசவனை

                                    எந்தனுக்குமருள் தர வேண்டுமெனத் துதித்து

     

                                     

Sunday, 23 July 2023

எனைக்காக்க…..

 எனைக்காக்க…..


                    பல்லவி


    எனைக்காக்க வா  கேசவா

    உனைத்தானே நான் நம்பினேனய்யா


                அனுபல்லவி


    அனைத்தும் நீயெனவே அறிந்தேன் மாதவா

    வினைப்பயன் களைந்திட நீயேயென் துணை


                   சரணம்


   தினையளவு உனையே துதித்தாலும் போதும்

   பனையளவு பலன்களை அள்ளித் தருபவனே

   முனைந்துனை துதித்திடுமடியார்க்கெல்லாம்

   சுனை நீராய்ச்சுரக்குமருள் தருவோனே

   

Saturday, 22 July 2023

பரமேச்வரி நீயே……

 

                                           பரமேச்வரி நீயே……


                                                பல்லவி

                                 பரமேச்வரி நீயே  பரிந்தருள் புரிவாயே

                                 அரனயனரி பணி லலிதாம்பிகையே   

                                                 துரிதம்

                                 சுரபதி, நரர் சுரர், நாரதர்,தும்புரு,

                                 கரம் பணிந்தேத்தும் காமேச்வரியே     

                                             அனுபல்லவி

                                  வரமருளும் கரமும் அபயகரமும் காட்டும்

                                  பர்வத குமாரி   கேசவன் சோதரி

                                                சரணம்

                                  கரங்களில் பாசாங்குசமேந்தும்

                                  திரிபுரசுந்தரி ஏகாம்ப்ரேச்வரி

                                  சரணடைந்தோர் நலம் பேணும் ஶ்ரீகாமாக்ஷி

                                  அறம் தழைக்கும் காஞ்சி மாநகர் வளர்

                                 

அரங்கனே …….

 “காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்,

                      பரவாசுதேவோ ரங்கேஶ ப்ரத்யக்ஷம் பரமம் பதம்'

விமானம் ப்ரணவகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்பூதம்'

         பாய்ந்தோடும் இந்தக் காவிரியே வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதி!திருவரங்கமே வைகுண்டம்! ரங்கநாதன்தான் அந்த வைகுண்டநாதன். இதுவே கண் கண்ட பரமபதம்!’

ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம்

வைகுண்டத்தில் ஓடுகிற விரஜை தான் ஸ்ரீரங்கத்தில் காவிரி ; 
ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம் ;
(அதில் இருக்கும்) வாசுதேவனே அரங்கன். 
விமானத்தின் பெயர் ப்ரணவாகாரம் ( விமானத்தில் உள்ள நான்கு கலசங்கள் வேதத்தின் பொருளான ப்ரணவத்தை குறிக்கிறது )
சயனத்தில் அரங்கனே ப்ரணவத்தால் விவரிக்கப்படும் பரம்பொருள் - ப்ரணவமே அரங்கன் !


                                          அரங்கனே …….


                                                பல்லவி

                           அரங்கனே ஶ்ரீமன் நாராயணன் கேசவன்

                           திருவரங்கமே பூலோக வைகுண்டம்

                                               அனுபல்லவி

                           பரமனவனுடனிருக்கும் பெரிய பிராட்டியே

                           பரந்தாமனவன் மார்பை அலங்கரிக்கும் திருமகள்

                                                   சரணம்

                           அரங்கம் தனிலோடும் காவிரியே விரஜை நதி

                           பரவாசுதேவனே  திருவரங்கநாதன்

                           மறை நான்கே நான்கு விமான கலசங்கள்

                           அரங்கன் கிடந்துறங்கும் தலமே பரமபதம்