மலர்மார்பன்
மலர் போன்ற நெஞ்சம் உடையவன். நம் ஹ்ருதயத்தில் விளங்கும் தாமரையில் ஞான ஒளியாய்க் காட்சி தருபவன்.
யோகிகளின் ஹ்ருதயத்தாமரையில் வீற்றிருப்பவன். தாமரையில் வீற்றிருக்கும் மலர் போன்ற ஸ்ரீயை தன் ஹ்ருதயகமலத்தில் தாங்குபவன்.
தன்னலமற்ற அன்பர்களின் பக்தியை எண்ணி எண்ணி சிவந்த மலர் போல் காட்சியளிக்கும் மார்பை உடையவன்.
ஐந்து விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட வைஜயந்தி மாலையை எப்போதும் மார்பில் அணிபவன்.
தன் பெயரைச் சொல்லும் அன்பரின் முகப் பரிதியைக் கண்டு மலரும் நெஞ்சத்தை உடையவன்.
ஒரே ஒரு மலரை பக்தியுடன் அளித்தாலும் உவந்து ஏற்கும் இளகிய நெஞ்சமுள்ளவன்.
அத்தகைய மலர்மார்பனின் தத்துவத்தைப் பாடுவோம்.
கமலமலர் நாபனை…
பல்லவி
கமலமலர்நாபனைக் கேசவனைப் பணிந்தேன்
கமலமலரமர் திருத்தங்கும் மார்பனை
அனுபல்லவி
கமலமென விளங்கும் நம் இதயத்தாமரையில்
அமர்ந்திருப்பவனை கமல நெஞ்சம் படைத்தவனை
சரணம்
அமரரும் முனிவருமடியாரும் துதிப்பதனால்
கமலமெனச்சிவந்த மணிமார்பையுடையவனை
கமலமுடன் சேர்த்து ஐவகை மலர் கோர்த்த
வைஜயந்தி மாலையை சூடிய கமலக்கண்ணனை
நாமம் சொல்லுமடியாரின் முகப் பொலிவை ரசிப்பவனை
தாமரை மலரொன்றே தந்தாலுமேற்பவனை
காமனைப் படைத்த அமலனாதிபிரானை
மாமதலைபிரானெனும் நாமமுடையவனை
No comments:
Post a Comment