ஶ்ரீ ஸ்துதி:(21).....!!!
ஸாநுப்ராஸ ப்ரகடித தயை:
ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப ஸ்நிக்தைரம்ருத லஹரீ
லப்த ஸப்ரஹ்யசர்யை: l
கர்மே தாப த்ரய விரசிதே
காட தப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சந்ய க்லபித மநகை:
ஆர்த்ரயேதா: கடாக்ஷை: ll
அனைவருக்கும் தாயாகிய பெரிய பிராட்டியே! இந்த உலகத்தில் வாஸம் செய்யும் அடியேன்
என் உடலினால் உண்டாகும் வியாதி போன்ற துன்பத்தையும், மிருகம், பறவை, மற்ற மனிதர்களால் வரும் துன்பமும் தெய்வங்களால் வரும் குளிர், சூடு, காற்று, மழை போன்றவைகளால் வரும் துன்பம் என்று மூன்று வகையான துன்பத்தினால் வாடுகிறேன், வேறு கதியில்லாமல் உன்னையே சரணடைந்த எனக்கு உன் கடைக்கண் பார்வையால் இந்த மூன்று துக்கங்களிலிருந்து குளிர்ச்சி ஏற்படும். எவ்வளவு குற்றம் செய்த போதும் சரணாகதி செய்தவனை மன்னித்து, பாபம் போக்கி, அடியவர்களிடம் நட்பை கொண்டு, அமுத வெள்ளம் போல் இப்படிப்பட்ட கருணை என் மேல் விழுந்தால் அனைத்து துக்கங்களும் இடமின்றி அழிந்து விடும். மூன்று தாபங்கள் :
1. ஆத்யாத்மீகம் : சரீரத்தைப் பற்றி வரும் தலை நோய் ஜல தோஷம் முதலியனவும் மனத்தைப் பற்றிவரும் காமம், கோபம், பயம் முதலியன .
2. ஆதி பௌதீகம் : மிருகம் , பக்ஷி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வருவன.
3. ஆதி தைவீகம் : குளிர், சூடு, காற்று, மழை, முதலியவற்றால் தெய்வீகமாக வருபவை.
தாயே ….
பல்லவி
தாயே பெரிய பிராட்டி உனையே
சேய் நானுனதருள் வேண்டித் துதித்தேன்
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் துணைவியே
நோயனைத்தும் தீர்ப்பவள் நீயென அறிந்தே
சரணம்
ஓயாதெனை வாட்டும் தாபங்கள் மூன்றும்
போயொழிந்திட உன் கடைக்கண்ணமுதளித்து
தீயோனெனக்கருள உனையன்றி ஆருளார்
தூயவளே பணிவோர் துயர் துடைப்பவளே
No comments:
Post a Comment