ஓசை
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்
- இது கண்ணதாசன் அன்று எழுதியது
டிராக்டர் உழும் ஓசை டவுன்பஸ் வரும் ஓசை
ஆக்டர் உளறுமோசை அரசியலார் புளுகுமோசைை
குத்துப் பாட்டோசை குடிமகனார் குழறுமோசை
வெத்துப் பேச்சோசை விரசக் கவியோசை
அலைபேசி அழைப்போசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண் பாடும் மாயமொழி கேட்டிலையோ
போலியர் கையூட்டில் பொருள்சேர்த்துப் பொலிந்திருக்க
ஏழையர் தம் இல்லத்து எழுந்தருள்வாய் தமிழ்ப்பாவாய்
-இது இன்று மாலன் எழுதியது
ஆலய மணியோசை தூரத்து இசையோசை
வாலைக்குமரிகளின் வளையல் கரவோசை
நீலவண்ணக் கண்ணன் கேசவன் குழலோசை
பாலைக்கறக்கையிலே பசுவின் மடியோசை
ஓலமிட்டு ஓடிவரும் கடலின் அலையோசை
சீலமிகு ஓதுவார்கள் ஓதும் தமிழோசை
ஆலமுண்ட நீலகண்டன் உடுக்கில் வருமோசை
இவையனைத்தும் நான் கேட்க வரமருள்வாயெம்பாவாய்
-இது இன்று “அக்ரிஷ்” எழுதிய எசப்பாட்டு
No comments:
Post a Comment