Monday, 24 January 2022

அகிலலோக நாயகியை….

சந்திர சடாதரி! முகுந்த சோதரி துங்க

      சலசலோசந மாதரீ

ஸம்ப்ரம பயோதரீ! சுமங்கலி! ஸுலக்ஷணி!

       சாற்றரும் கருணாகரீ!

அந்தரி! வராகி! சாம்பவி! அமலை! ஸுரதோத்ரி!

       ஆதி ஜலஜால ஸூத்ரி!

அகிலாத்ம காரணீ! விநோதசய நாரணி!

     சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! மலைராஜ

சுகுமாரி! கௌமாரி!  உத்

      துங்க கல்யாணி! புஷ்பாஸ்த்ர அம்புஜ பாணி!

தொண்டர்கட் கருள் சர்வாணீ!

      வந்து அரிமலர்பிரமன் ஆதிதுதி வேதஒலி

வளர்த்திருக்கடவூரில் வாழ்   

வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்

வாமி! அபிராமி! உமையே! 

சந்திரனை ஜடையில் தரித்தவளே!, திருமாலுக்கு இளைய சகோதரியே!, தூய தாமரை போன்ற  திருவிழிகளை உடையவளே! காளியே! எக்காலத்தும் தந்தருளும் அமுதம் நிறை தனங்களையுடைய தாயே! மங்கள் வடிவானவளே! அனைத்து லட்சணங்களையும் கொண்ட அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத அபிராம வல்லியே! வார்த்தைகளால் விவரிக்க முடியாத கருணையின் வடிவானவளே! அனைத்திற்கும் ஆதாரமான துர்க்கையே! உலகம் உய்யும் பொருட்டு பன்றி ரூபத்தில் வந்தவளே! சிவபெருமானின் நாயகியே! பார்வதியே! இன்பம் தருபவளே!, உலகை இயக்கும் மாயவித்தையின் சூத்ரதாரியே! உலக உயிர்களுக்கு காரணமானவளே! வெற்றி மிக்க நாரணியே! முழுமையான ஞான பூரணியே!, பேரழகுடையவளே! ஆதியும் அந்தமும் இல்லாமல் நிரந்தரமாய் விளங்குபவளே! அனைத்துயிர்களையும் காப்பவளே! மலையர்சனின் புதல்வியாக அவதரித்தவளே! என்றும் இளமையாக உள்ளவளே!  அனைத்து மங்களங்களையும் வழங்கும் கல்யாணியே! தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்க்கணைகளை ஏந்தியவளே!, தொண்டகர்களுக்கு அருள் புரியும் சர்வேஸ்வரியே உன்னை  வணங்குகின்றோம்.

திருமாலும் பிரம்மனும் வந்து துதிக்கின்ற வேத ஒலி முழங்குகின்ற திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே! என்று அன்னையின் உருவ அமைப்பையும், பராக்கிரமத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தனிச்சிறப்பையும் உணர்த்துகின்ற பல நாமங்களைக் கூறி துதிக்கின்றார் அபிராமி பட்டர் !


                              அகிலலோக நாயகியை….


                                             பல்லவி

                           அகிலலோக நாயகியை அபிராமியைப் பணிந்தேன்

                           புகழ் மிகு திருக்கடவூர் பதிதனில் வீற்றிருக்கும்

                                             துரிதம்  

                           அமரர்கள்  ரதிபதி   அமரேந்திரனும்

                           குமரன் கணபதி  அரனயனரியும்

                           சுக சனகாதியர் முனிவர்களனைவரும்

                           சகலரும் பணிந்திந்திடும் கேசவன் சோதரி                          

                                             அனுபல்லவி                      

                            இகபரசுகமனைத்துமளித்திடுமீச்வரி

                            புகலிடமவளென மலரடி வணங்கி

                                                  சரணங்கள்

                            திங்கட் பிறைசூடிய திருமுடி அழகுடைய

                            கங்காதரன் சிவனின் மனங்கவர் நாயகி

                           அங்க சௌந்தரியம் கொண்டு ஒருவருக்கும் ஒவ்வாத

                           மங்கள வடிவுடையாள் பங்கய விழியுடையாள்


                           பொங்கும் அமுதம் நிறை தனங்களையுடையவள்

                           எங்கும் நிறைந்திருக்கும்  மாகாளி பைரவி

                           வராக வடிவெடுத்து உலகினைக் காத்தவள்

                           பொங்கரவுக்குடையுடைய துர்கையுமவளே


                           உலகுயிரனைத்தையும் இயக்கும் மாயையவள்

                           மலையரசன் மகளாயவதரித்த உமையவளே

                           ஞான பூரணியும் நாரணியுமவளே

                           மலர்க்கணைகள் வைத்திருக்கும் மலர்க்கரத்தாளவளே 

        

               

                                                                                                                                     

                           

                           

No comments:

Post a Comment