சரவணபவனே….
பல்லவி
சரவணபவனே உன் அழகிய பதம் பணிந்தேன்
கரன் முரனை வதைத்த கேசவன் மருகனே
அனுபல்லவி
புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணுதித்தவனே
நரர்சுரரிந்திரன் குலம் காக்கும் வேலவனே
சரணங்கள்
பரிதி பல கோடியை மிஞ்சுமொளியுடையவனே
பறந்து செல்லும் மயிலை வாகனமாய்க்கொண்டவனே
கரந்தனில் வேலேந்தி எதிரிகளை அழிப்பவனே
வரந்தருமபய கரம் நீட்டும் முருகனே
சுலபமாயரக்கரின் குலமழிக்கும் குமரனே
உலகமனைத்தையும் காக்கும் சண்முகனே
காமாதி அறுபகையை வென்ற அறுமுகனே
காமனை விடவும் பேரழகுடையவனே
மகேந்திர மலைவாழ் மயில்வாகனனே
சகலரும் போற்றும் வேலாயுதனே
சுகபாணி அபிராமி அமுதீசர் மகனே
இகபர சுகம் தரும் குகபெருமானே
உலகைப் படைத்தவனே சர்வலோக நாயகனே
அலகிலா விளையாடல் பல புரிந்தவனே
மலையையே பிளக்கும் பாணங்களுடையவனே
நிலவணிந்த பெம்மான் பரமசிவன் மைந்தனே
சந்திர சூரியர்க்கு ஒளியளிப்பவனே
இந்திரன் மகளை மணம் புரிந்த குகனே
தந்தைக்கு மந்திரம் ஓதிய குருபரனே
நிந்தனை செய்திடுமரக்கரை அழிப்பவனே
அருமறைகள் போற்றும் அரவிந்த பாதனே
குறமகள் வள்ளியை மணந்த குருகுகனே
திருமுக அழகால் நிலவைப் பழிப்பவனே
வருமிடர் தீர்த்திடும் செல்வ முத்துக்குமரனே
தருமநெறி காக்க தரணியிலுதித்தவனே
கருமவினைப் பயனைக் களைந்திடச் செய்பவனே
முருகப் பெருமானே முக்கண்ணன் மகனே
திருமகள் மருகனே தீன கருணாகரனே
No comments:
Post a Comment