காந்திமதீச்வரி சரணம்💛💛💛
#சிவகாமியம்மை_பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம்
கண்ணால் உனது மலர்ப்பாதம் கண்டே களிக்க இருகரமும் கமழ்பூ
மலரால் பூசிக்கக் காலுங் கோயில் வலஞ்செய்ய,
எண்ணார் செவிகள் நின்கீர்த்தி இசையே கேட்கத் தலைவணங்க
ஏழேழ் சென்மம் எடுத்தாலும் என்னா நின்னைத் தொழுதேத்த,
பெண்ணார் அமுதே மலையரையன் பெற்ற மதலாய் உலகமெலாம்
பிறங்க வேண்டிப் பிறந்த பிள்ளாய் பேராநந்த வெள்ளத்தில்,
தண்ணார் அமுதே சுவையூறும் தகைசேர் முத்தந் தருவாயே..!!!
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித் தாயே முத்தந் தருவாயே..!!!
விளக்கம் : தாயே சிவகாமசுந்தரீ பரதேவதா..!! அடியேனது கண்கள் ஒப்புயர்வு இல்லாத தம்முடைய கமலமலர்ச் சரணங்களையே கண்டு மகிழ்வுற வேண்டும்..!!! அடியேனது இரு கரங்களும் மணம் நிறைந்த மலர்களை தூவி தங்களையே வழிபாடு செய்ய வேண்டும்..!!! போகாத இடம்யாவும் சுற்றித் திரிந்த அடியேனது கால்கள் தேடி தேடி தம்முடைய கோயிலையே வலம்வர வேண்டும்..!!! கொடிய விஷயங்களை மட்டுமே கேட்ட அடியேனது செவிகள் இரண்டும் தங்களை பற்றிய அருட்பாடல்களை மட்டுமே கேட்க வேண்டும்..!!! எங்கெங்கோ யார்யாருக்கோ வணங்கிய அடியேனது சிரங்கள் இனி தங்களை மட்டுமே வணங்கிப் போற்ற வேண்டும்..!!! அடியேனது ஊழ்வினையால் ஏழேழு ஜென்மங்கள் எடுத்து உழன்றாலும் அத்தனை ஜென்மங்களிலும் தங்களையே பூசித்து பெருமை கொள்ள வேண்டும்..!!! பெண்களில் சிறந்து அமுதம் போன்றவளே.. பர்வதராஜனுடைய தவத்தில் மகிழ்ந்து உலகமெலாம் சிறக்க மங்களம் பெருக பார்வதியாய் அவதரித்தவளே..!!! குளிர்ச்சி நிறைந்தவளே அமுதத்தை காட்டிலும் உயர்ந்த பேரானந்த நிலையில் இருப்பவளே அத்தகைய நிலையில் அடியேனுக்கு முத்தமளித்தருளே..!!! வளம் செழிக்கும் பெரும்பற்றப்புலியூரில் திகழும் ஆதிமத்யாந்தரஹிதையே.. ஸிவஸஹிதையே.. பராகாஸினியே.. ஸ்ரீ ராஜராஜேஷ்வரியே.. ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையே.. ஸிவகாமகலேஷ்வரீ பரதேவதையே முத்தம் அளித்தருளே..!!!
பெண்ணணங்கே…
பெண்ணணங்கே தாயே சிவகாமசுந்தரியே
வண்ணமுற மலையரசன் ஈன்றெடுத்த மாதவமே
கண்ணன் கேசவனின் அன்பு சோதரியே
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிபவளே
கண்களெப்போதுமுன் மலரடியே காண வேண்டும்
கரமிரண்டும் மலர்தூவி உனையே துதிக்க வேண்டும்
ஊரெங்கும் திரிந்த என் கால்களிரண்டும்
உனது கோயிலையே தினம் சுற்றி வரவண்டும்
செவியிரண்டுமுன்னருட் பாடலையே கேட்க வேண்டும்
ஊராரைப் பணிந்த சிரமுனையே வணங்க வேண்டும்
ஏழேழ் பிறவியிலுமுனையே துதிக்க வேண்டும்
முதம் தருவாயே பெரும்பற்றப் புலியூர் வாழ்
No comments:
Post a Comment