தீபாவளிக்கு மறுநாள்
வீதியெங்கும் நிறைந்திருக்கும்
வெடிக் குப்பை கண்டு
விக்கித்து மிரள்கிறான் மாரி
செய்தித்தாள் காணாமல்
சிடுசிடுத்து முணுமுணுத்து
இணையத்தில் உலவுகிறான் பாரி
இரண்டு மூன்று இனிப்பை
ஏகமாய்த் தின்றுவிட்டு
இரத்த்தில் சீனி ஏறத்
தவிக்கிறான் சாமி
இன்றைக்கும் இட்டிலியா
இல்லை தோசையா
என முடிவு தெரியாமல்
மயங்குகிறாள் மாமி
அருந்திய சரக்கனைத்தும்
இடியாய் தலையிறங்க
துடிதுடித்துப் போனான் காளி
இடைவிடாமல் டிவிபார்த்துக்
களைத்த கண்களோடு
இன்னும் உறங்குகிறாள் ரூபி
கெளரி விரதத்தன்று
கறிக் குழம்பை என் செய்ய
வீசுவதா?, வைத்திருப்பதா?
குளிர்ப் பெட்டி திறந்தபடி
குழம்புகிறாள் ராணி
எப்போதும் போல எனக்கு
இது இன்னுமொரு நாளே
என்றெண்ணிக் கதிர்பரப்பி
எழுகிறான் சூரி (யன்)
“மாலன்” கவிதை
“எசப்பாட்டு”
தீபாவளிக்கு மறுநாள்
குப்பையள்ளும் சுப்பையனுக்கு
எப்பவும் மாற்றமில்லை தீபாவளியன்றும்
குப்பையள்ளிக் கொட்டிவிட்டு
சப்பையாய் சரக்கடித்துவிட்டு சாலையோரம் கிடக்க
என்றும் போல் தினசரியில்
அன்றும் செய்தி என்று சலித்துக் கொண்டு
இன்று இணையத்தில் அதையே தேடுகிறான் பாரி
நன்று அவன் வழி அவனுக்கு
இனிப்பெல்லாம் கூடாது
உனக்கு சர்க்கரை நோயென்று
கனிவுடன் மருத்துவர் சொன்னாலும்
புனிதா தீபாவளியின்று மட்டும்
எனச்சொல்லி தின்று விட்டு திண்டாட
காலைச்சிற்றுண்டி இட்டிலி தோசைக்கு
சட்டினியா சாம்பாரா இரண்டுமா
என மனத்தில் மாமி பட்டிமன்ற நடத்தி
தீர்ப்புசொல்ல சாலமன் பாப்பைய்யாவை எதிர் நோக்க
இணையத்தில் செய்தி தேடும் பாரி
கணையத்தில் நோய் பெருகும் புனிதா
அணைக்காமலே டிவியருகே
கௌரி விரதத்தன்று கண்ணுறங்கும் ரூபி
சட்டினியும் சாம்பாரும்
கெட்டு விடாமலிருக்க குளிர்ப்
பெட்டியிலே மாமி அதை எடுத்து வைக்க
எப்போதும் போலெனக்கு
இது இன்னுமொரு நாளே
என்றெண்ணி மதியும் ( நிலாப்பெண்!)
அன்றும் இரவைத் தொடங்கினாள்
No comments:
Post a Comment