தங்கமலைதனில்……
பல்லவி
தங்கமலைதனில் வீற்றிருப்பவளே
சங்கரன் பங்கிலுறை சங்கரி கௌரி
அனுபல்லவி
மங்களமாய்க் காமகோடி பீடம் தனில்
தங்குமீச்வரி கேசவன் சோதரி
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் பாலாம்பிகையே
பங்கய விழியாளே பர்வத குமாரி
சிங்கவாகனத்திலமர்ந்திருப்பவளே
எங்களைக் காத்தருள்வாய் லலிதாம்பிகையே
சங்குக் கழுத்தழகி சாமள நிறத்தழகி
திங்கள் பிறயணிந்த அங்கயற்கண்ணி
பொங்கரவணிந்த சிங்கார வடிவழகி
எங்கள் குலம் காக்கும் தங்க க்காமாக்ஷியே
சண்ட முண்டாசுரனை வதைத்தவள் நீயே
தண்டமெனக் கரும்பு வில்லேந்துமன்னையே
அண்டசராசரங்களைக் காத்திடும் தாயே
புண்டரீகாக்ஷன் துதித்திடும் பரதேவியே
கவலை பிணியிடரனைத்தையும் களைந்து
பவக்கடல் கடந்திடத் துணைபுரிபவளே
சிவன் மனங்கவர்ந்த சிவகாமேச்வரியே
புவனம் போற்றும் அகிலாண்டேச்வரியே
No comments:
Post a Comment