என் அய்யனே.. உன்பால் பேரன்பு பூண்டு உனது பொன் போன்ற சுடர்மிகு திருவடிகள் பால் அன்புடன் வணங்கி, நெருப்பில் வீழ்ந்த மெழுகு போல உனை எண்ணி உருகி, உருகி உன்னோடு சிவநகர் புகுந்தனர் உனது அடியார்கள். நான் அவ்விதம் அழுது உருகி, உருகி உனைத் தொழவில்லையோ.? அவர்களைப் பின் தொடரவில்லையோ? வீணே இப்பிறவி கழிந்திடுமோ? நான் என்ன சொல்லித் தொழுது உனை பின் தொடர்ந்து வரமுடியும்? எனக்கு நீ சொல்லேன்..
பேரின்ப அனுபவத்தில் தன்னை மறந்திருத்தல் ஆனந்த பரவசமாகும்."
திருச்சதகம் ஆனந்த பரவசம்
அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே.
பதப்பொருள் : நின்பால் அன்பாம் மனமாய் - உன்னிடத்து உண்மையான அன்புடைய மனத்தராய், அழல் சேர்ந்த மெழுகே அன்னார் - நெருப்பிலிட்ட மெழுகு போல உருகுகின்றவர்களாய், மின் ஆர் - ஒளி நிறைந்த, பொன் ஆர் கழல் கண்டு - பொன் போன்ற உன் திருவடியைப் பார்த்து, தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் - வணங்கி உன்னைத் தொடர்ந்து வந்தவர்களாகிய அடியாரோடும், தொடராதே - பின்பற்றிச் செல்லாமல், பழுதே பிறந்தேன் - தவறுடையவனாயினேன், என் கொண்டு உன்னைப் பணிகேன் - இனி, எத்துணை கொண்டு உன்னை வணங்குவேன்? அழுகேன் - உனது திருவருளைப் பெறுதற்கு அழுகின்றேன் (எனக்கு இரங்கியருள்வாயாக.)
விளக்கம் : அன்பு மனத்தவர் இறைவன் கழலிணையைக் கண்டதும் உருகும் தன்மையராதலின், 'அழல் சேர்ந்த மெழுகே அன்னார்' என்றார். இறைவன் திருவடியை அழலினுக்கு உவமிப்பார், 'மின்னார் கழல்' என்றார். அழலினைச் சார்ந்த மெழுகு அதிற்கலந்துவிடுவது போலக் கழலினைச் சார்ந்த அடியாரும் கலந்துவிட்டாராதலின், 'தொழுதே உன்னைத் தொடர்ந்தார்' என்றார். தாம் பின்தங்கினமையால் அடியார் துணையுமின்றி எத்துணை கொண்டு தொடர்வேன் என்பார், 'என் கொண்டுன்னைப் பணிகேனே?' என்றார்.
திருப்பெருந்துறை……
பல்லவி
திருப் பெருந்துறையுறை சிவபெருமானே
அருவ வடிவான உன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
திருமால் கேசவனும் பிரமனும் தேடிய
திருவடியும் திருமுடியுமுடைய பெருமானே
சரணம்
உருகும் மெழுகு போலுன் பொன்கழல் கண்டு
உருகுமடியாரை வணங்கித் தொடராமல்
பெரும் பழுது செய்த எனை ஆட்கொள்ளக்
கருணையுடன் வேண்டினேன் ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment