‘சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேசம் விஸ்வாகாரம் ககன சத்ருசம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம் யோகிஹ்ருத்யான கம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்’ என்னும் வரிகளுக்கு என்ன அர்த்தம்? விஷ்ணுவினது சாந்தமான உருவம். அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம். தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம். அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம். அவர் ஆகாயமாக இருப்பதால், வடிவம் இல்லாத ககன சத்ருசம். அவர் உருவம், மேகத்தின் வர்ணமான சாம்பல் நிறத்தில் இருக்கும்.
சுபத்தைக் கொடுக்கும் உடல் உறுப்புகளைக் கொண்டதால், சுபாங்கம். மகா லட்சுமிக்கு, காந்தன். தாமரைக் கண்கள் கொண்டவர் என்பதால் கமல நயனம். அவரை அடைவது எப்படி? யோகிகளின் இதயம் இருக்கிறதே, அதுபோல யோகாப்பியாசம் செய்ய வேண்டும். அவர்களின் தியானத்தில்தான் அவர் இருப்பார் என்பதால் யோகிஹ்ருத்யான கம்யம். இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் எத்தனையோ விதமான பயங்களை அழிப்பதால் பவபய ஹரம்.. அது யார் அவ்வளவு பெரிய ஆசாமி? அவர்தான் சர்வ லோகங்களுக்கும் நாதனான பகவான். அவரை வணங்கு. இதுவே அதன் கருத்து.
பவபயம் களைந்திடும்…..
பல்லவி
பவபயம் களைந்திடும் திருமாலைக் கேசவனை
கவலை பிணியிடர் நீங்கிடத் துதித்தேன்
அனுபல்லவி
தவம் செய்யும் முனிவரும் சுகசனகாதியரும்
அவனியோரனைவரும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
பாம்பணையில் துயில்பவனை பத்மநாபனை
சாந்தம் நிறைந்தவனை மேக வண்ணனை
யோகியர் மனத்துறை விச்வேச்வரனை
திருவுறை மார்பனைக் கமலக்கண்ணனை