“சரணாலயம்”
“அத்தியாயம் இரண்டு”
சோபாவில் அமர்ந்திருக்கும் போது எண்ணங்கள் முத்துக்கருப்பனைப் பற்றி அறிந்த தகவல்களை அசை போட்டது. அவரொரு விவசாயக் குடும்பதில் பிறந்து ஒரு சிறு கிராமத்தில் வளர்ந்தவர். அவர் வளர்ந்த கிராமத்தில் எட்டாவது வரையிலுள்ள நடுநிலைப் பள்ளியே இருந்தது. மேல்நிலை பள்ளிப் படிப்புக்கு இருபது முப்பது மைல் தொலைவிலுள்ள டவுனுக்குப் போக வேண்டும். ஒரேயொரு டவுன் பஸ் மட்டுமே காலை ஏழுமணிக்கும் மாலை ஐந்து மணிக்குமுண்டு. மிகவும் சிரம ப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்து டவுனில் உள்ள ஒரேயொரு பொறியியல் கல்லூரியில் இடம் பிடித்து கல்லூரியின் முதல் மாணாக்கராகத்தேறி பட்டப் படிப்பை முடித்தார். அவருடைய பெரிய குடும்பத்திலிருந்து அவர் மட்டுமே பட்டப் படிப்பும் மேல் படிப்பும் படித்திருந்தார். அவருடன் பிறந்த இரண்டு சகோதரர்களும் தந்தையுடன் விவசாயத்தை கவனித்துக் கொண்டார்கள். இரண்டு சகோதரிகளும் உள்ளூரிலிருந்த பள்ளியில் படிப்பை முடித்துத் திருமணம் செய்து கொண்டு அருகேயுள்ள ஊர்களில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டனர். முத்துக்கருப்பன் மட்டும் சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்மில் மேல் படிப்பைத் தொடர்ந்து படித்து முதுகலைப் பட்டம் முடித்தார். அதிலும் கல்லூரியின் முதல் மாணக்கராக விளங்கினார். ஓரிரு ஆண்டுகள் சென்னையில் கணினி மென்பொருள் சம்பந்தமான பணியில் ஈடுபட்டு, அந்தத் துறையில் நல்ல பெயரெடுத்து பின் அமெரிக்காவிலுள்ள சிலிக்கன்வேலி (Silicon Valley)யில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு மென்பொருள் தயாரிக்கும் கம்பெனியில் உயர்ந்த உத்தியோகத்தில் சேர்ந்தார். அங்கு சுமார் 22 ஆண்டுகள் உயர் நிலைகளில் பணியாற்றியபின் விருப்ப ஓய்வு பெற்று திரும்ப சென்னை வந்து செட்டிலானார். தெய்வானை முத்துக்கருப்பன் நல்ல வசதியான செட்டியார் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை சென்னையில் புகழ் பெற்ற தொழிலதிபர். சென்னையிலுள்ள தொழிற்சாலைகள் தவிர செட்டிநாட்டில் பெரிய நூற்பாலைகளுமுள்ளது. தெய்வானைக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அவரும் அவர் கணவரும் ஊரிலுள்ள ஆலையைப் பராமரித்து வருகிறார்கள். தெய்வானையும் சென்னயிலுள்ள பல்கலைக்கழத்திலேயே மென்பொருள் துறையில் மேற்படிப்புப் படித்து, பின் அமெரிக்காவில் முத்துக்கருப்பன் பணிபுரியும் அதே கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இருவரும் விரும்பிக் காதலித்து பெரியோர்கள் சம்மதத்துடன் மணந்து கொண்டனர். மிகவும் அன்யோன்ய தம்பதிகளாகத் திகழ்ந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.அவர்கள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே நன்கு செட்டிலாகி விட்டனர். ஆக முத்துக்கருப்பன் தம்பதியர் அமெரிக்காவில் வாழ்ந்தது போதுமென முடிவு செய்து சொந்த நாட்டிற்கே வந்து செட்டிலாகிவிட்டனர். இருவருமே சொந்த நாட்டினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் “ சரணாலயம்” என்ற முதியோரில்லத்தை ஸ்தாபித்தனர்.
No comments:
Post a Comment