நான்முகன் திருவந்தாதி(42)....!!!
சென்று வணங்குமினோ சேண்உயர் வேங்கடத்தை*
நின்று வினைகெடுக்கும் நீர்மையால்* என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்*
அடிக்கமலம் இட்டுஏத்தும் அங்கு.
ஸ்ரீதிருமழிசையாழ்வார் ♦ நான்முகன் திருவந்தாதி(42)
மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
தன் ஸ்வபாவத்தினால்
பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும் அத்திருமலையில்,
பரிமளம் மிக்க தாமரையில் பிறந்தவனான பிரமனும்
முக்கண்ணனான சிவபிரானும்
எக்காலத்தும் (எம்பெருமானது) திருவடிகளிலே தாமரைப் புஷ்பங்களை ஸமர்ப்பித்து
துதித்துக்கொண்டிருப்பார்கள்.
அன்பர்கட்கு உபதேசிக்கிறார், சென்னியோங்கு தண் திருவேங்கடத்தைச் சென்று வணங்குங்கள், அந்தத் திருமலைதானே உங்கள் பாவங்களை எல்லாம் மாற்றிவிடும், பிரமன் சிவன் முதலான தேவர்களும் தங்கள் தங்கள் அதிகாரம் பெறுவதற்காக அத்திருமலையிலே சென்று அப்பன் திருவடிகளிலே புஷ்பங்களை இட்டு இறைஞ்சித் துதித்துநிற்பர். ஆகையாலே நீங்களும் அங்கே சென்று வணங்குங்கோள் என்றாராயிற்று.
தன்னை அடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்ற தென்ப. வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க. “வெங்கொடும் பாவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலையான தென்று“ என்ற புராணச் செய்யுளும் காண்க.
சென்று வணங்குவோம்….
பல்லவி
சென்று வணங்குவோம் திருவேங்கடத்தை
நன்று நம் பாவங்களத் தீர்க்கும் திருமலையை
அனுபல்லவி
கொன்றரக்கன் கம்சனை வதைத்த கேசவன்
நின்றருளும் அழகிய திருவேங்கடமலையை
சரணம்
அன்றலர்ந்த தாமரைப் புதுமலர் தூவி
என்றும் நான்முகனும் நமச்சிவாயனும்
தொன்று தொட்டு பணிந்தேத்தும்
மன்னு புகழ் கோவிந்தன் நிற்கும் திருமலையை
No comments:
Post a Comment