உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார், திருவடி சேர்க்குமாறு எம்பெருமானை வேண்டுகின்ற திருவாய் மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், எம் பெருமானை நோக்கி, நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த, நிலமும், நீரும், தீயும், ஆகாயமும், காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற அண்டமாகின்ற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிக்க ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான திருவடிகளிலே எப்பொழுது கூட்டு வாய்?" என்கின்றார்.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
பரம்பொருளே……
பல்லவி
பரம் பொருளே திருமாலே கேசவனே உனையே
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மலர்ப் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
அரனயனமரர் சுகசனகாதியர்
சுரபதி நாரதரனைவரும் வணங்கிடும்
சரணம்
பிரளயம் தனைச் செய்து உலகை உண்டுமிழ்ந்து
நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்றென
அமரர் வாழ் கோட்டையில் அமர வைத்த என்னை நீ
பரம பதம் தன்னில் கூட்டுவது எந்நாளோ
No comments:
Post a Comment