ஸ்துதி ஸதகம் !ஸ்ரீ மூகபஞ்சசதீ !
த்ரியம்பக குடும்பினீம் த்ரிபுரஸுந்தரீமிந்திராம்
புளிந்தபதி ஸுந்தரீம் த்ரிபுர பைரவீம் பாரதீம் ।
மதங்ககுல நாயிகாம் மஹிஷ மர்த்திநீம் மாத்ருகாம்
பணந்தி விபுதோத்தமா விஹ்ருதிமேவ காமாக்ஷி தே ॥ 80॥
காமாக்ஷியே, நீயே முக்கண்ணன் ஈஸ்வரனின் பத்னி பார்வதி! நீயே திரிபுரனின் பத்னி திரிபுரசுந்தரி! நீயே மஹாலக்ஷ்மி! நீயே கிராதராஜன் மனைவி கிராதி! நீயே திரிபுரபைரவி! நீயே பாரதி என்றழைக்கப்படும் ஸரஸ்வதி! நீயே மதங்க ரிஷியின் மகளான மாதங்கி! நீயே மஹிஷாஸூரமர்த்தினி! நீயே அக்ஷரமாத்ருகா! இதையே பல கவிஞர்களும் தமது கவிதைகளில் புகழ்ந்து வர்ணிக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ காமாக்ஷியை ஞானிகளும் பலவாறாக வணங்குகிறார்கள். அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அருள வேட வடிவத்தில் கிராதராஜனாக வந்த சிவபெருமானின் துணையாக வந்த வேடுவச்சி கிராதியும் அவளே. மதங்கம் என்றால் யானை என்பது பொருள் . ஊழிக் காலத்தின் இறுதிப் பகுதியில் பிரம்மா, ஷமதங்கம் என்னும் யானையின் வடிவம் கொண்டு சிவனைத் துதித்தார். சிவனின் அருளால் படைக்கும் ஆற்றலைப் பெற்றார். மதங்க வடிவில் இருந்த பிரம்மா தன் ஆற்றலால் மதங்க முனிவரை மகனாகப் பெற்றார். இவர் பூர்வ ஜென்மப் பலனால் புண்ணியங்கள் நிறைந்த திருவெண்காடு என்னும் திருத்தலத்தை அடைந்தார். அங்கு சிவனை எண்ணி தியானம் இருந்து அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும், சிவனே தனக்கு மருமகனாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்க, சிவனும் அருளினார். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக மாதங்கி என அவதரித்தவளும் அவளே. மகிஷாசுரனை வதைத்த துர்க்கையும் அவளே. அ முதல் ஹ வரையுள்ள மாத்ருகா அக்ஷரங்கள் தேவியின் ஸ்வரூபம் ஆகும். மாத்ருகா ஸரஸ்வதி என்றும் அவளைப் புகழ்வார்கள். தஸமஹாவித்தையின் காளிகுலம், ஸ்ரீகுலம் எல்லாம் அவளே. எல்லா தேவபேதங்களும் தேவியே. இப்படி ஒன்றேயான சித் ஆன தேவியைப் பலவாறாகக் கூறுவதும் ஆனந்தமே.
அனைத்தும் நீயே
பல்லவி
அனைத்தும் நீயே அன்னையே காமாக்ஷி
நினைத்துனை தினம் துதித்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
வனதுர்கையே கௌரி அட்சரங்களின் தாயே
தனக்கிணையில்லாத ஶ்ரீ சக்ர நாயகி
சரணம்
மாதங்கி மகாலக்ஷ்மி மகிஷாசுரமர்த்தினி
கிராதன் துணைவியே கிராதி பைரவியே
திரிபுரன் மனங்கவர் திரிபுரசுந்தரி
சரச்வதி பாரதி கலைமகளும் நீயே
No comments:
Post a Comment