'காமாக்ஷியே! வணங்குபவர்க்கு வேண்டியயாவும் அருளி முக்தியளிப்பவளும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவளும், சிம்மவாகினியும், சிவனை மகிழ்விப்பவளும், எதிரிக்கூட்டத்தை அழிப்பவளுமான நீயே துர்க்கை யல்லவா.... தாயே காமாக்ஷி! நீயே பிரம்மாவின் தாமரை போன்ற முகத்திலும், விஷ்ணுவின் திருமார்பிலும், பரமனின் மடியிலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என பதிவிரதையாக இருக்கிறாய். உன் பார்வையின் தீட்சண்யமே பகல் போன்ற ஒளி. கருநெய்தல் பூவைப்போன்ற இருட்டின் ஒளியை அது தடை செய்கிறது. இது எப்படி உள்ளது என்றால் இருட்டு என்கிற வினையாகிய அயர்வை உனது கடாட்ச தீட்சண்யம் அழித்து எனது இதயத் தாமரையை மலரச் செய்வதாக உள்ளது.
அருள் தருமன்னையே…….
பல்லவி
அருள் தருமன்னையே காமாக்ஷி தேவி
பெருமைக்குரிய காஞ்சி மாநகர் வளர்
அனுபல்லவி
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
சிம்ம வாகனியே சிவசக்தியே துர்கே
சரணம்
திருமால் கேசவன் மார்பிலிருப்பவளும்
பெருமான் சிவன் மடியில் வீற்றிருப்பவளும்
பிரமனின் தேவியுமாய் காட்சியளித்திடும்
சரச்வதியும், திருமகளும், மலைமகளும் நீயே
கருநெய்தல் மலர் போன்ற இருளினைப் போக்கி
கருவிழி காந்தியால் பகலொளி தருபவளே
கருணையுடன் நீயேயென் மன இருள் நீக்கி
அருள் தந்தென் இதய கமலத்திலமர்ந்தாய்
No comments:
Post a Comment