விவேக சிந்தாமணி - கடவுள் வணக்கம்
அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால் - அருணாசலம் என்னும் திருவண்ணாமலை கோபுர வாசலில் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை கை தொழுது கும்பிட்டால்....
அல்லல் போம் - எல்லாவிதமான தடங்கல்களும் தொல்லைகளும் போகும்
வல்வினை போம் - என்ன செய்தாலும் பின் தொடர்ந்து தன் பயனைக் கொடுக்கும் நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் அழிந்து போகும்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் - பிறவிகள் எடுக்கக் காரணமான முன்வினைகளின் தொல்லை தீர்ந்து போகும்போகாத் துயரம் போம் - என்றும் நீங்காமல் மனத்தில் நிற்கும் துயர நினைவுகள் எல்லாம் தெளிந்து போகும்
கெட்டவைகள் போகும். அது மட்டுமா
நல்ல குணம் அதிகமாம் - நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும் பெருகும்.
கணபதி கருணைக் கோபுரத்தில் இருக்கிறார். அவரைக் கைகூப்பித் தொழுத காலந்தொட்டு நமக்கு வரும் துன்பங்கள் விலகிப் போய்விடும். பிறவியிலேயை நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வலிமை மிக்க வினைகள் (தலைவிதித் துன்பங்கள்) விலகிப் போய்விடும்.
அன்னை வயிற்றில் பிறந்திருக்கிறோமே அந்தப் பிறவித்துன்பம் விலகிப் போய்விடும் (பிறவி இல்லா வீடு பேறு பெறலாம்). நம்மோடு ஒட்டிக்கொண்டு போகாமல் இருக்கின்ற கவலைகள் விலகிப் போய்விடும். நம்மிடம் இருக்கும் நல்ல பண்புகள் மேலும் அதிகமாகும்.
அதனால் செல்வக் கணபதியை எந்நேரமும் வணங்குங்கள்.
அருணை கோபுரத்து…….
பல்லவி
அருணை கோபுரத்துக் கணபதியை வணங்குவோம்
கருணையுடன் காத்தருளும் அருணாச்சலன் புதல்வன்
அனுபல்லவி
பெருமைக்குரிய கேசவன் மருகன்
திருமுருகன் தமையன் உண்ணாமுலை மைந்தன்
சரணம்
அல்லலிடர் நீங்கும் வல்வினை தொலையும்
கருவிலுருவாகா பெருநிலை கிடைத்திடும்
தீராத்துயர் தீரும் நற்குணங்கள் பல சேரும்
வளமான நலவாழ்வு நமை வந்து சேரும்
No comments:
Post a Comment