Saturday, 30 January 2021

மயிலாடுதுறைவளரீசன்.....

 ஸ்ரீ மாத்ரே நமஹ.....


பாதாம் புயத்திற் சிறு சதங்கைப்

  பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும்

படர் பாடகமுந் தண்டையுடன்

  படியுங் கொலுசுந் தழைத்தருளும்

பீதாம்பரமுந் துவள் இடையும்

  பிரியா தரைஞான் மாலைகளும்

பெருகுந் தரள நவமணியும்

  புனையுங் குயமும் இரு புயமும்

போதாரமுத வசன மொழி

  புகழும் வாயும் கயல் விழியும்

புண்டரீகத் திரு நுதலும்

  பொன் போற் சடையும் மதிமுகமும்

வாதாடிய பேரின்ப ரச

  வதனக் கொடியே உனை அடுத்தேன்

மயிலா புரியில் வளரீசன்

  வாழ்வே அபயாம்பிகைத் தாயே

விளக்கம் :

          அழகிய திருவடிகளில் சதங்கையும், தண்டையும், மணிகள் படர்ந்த கொலுசும் அணிந்தவளே!

இடையில் அழகிய பட்டாடையினையும், இடையை பிரியாது அரைஞானும், முத்து மற்றும் நவமணிகளாலான மாலைகளையும் அணிந்தவளே!  பரஞானம் அபரஞானம் எனும் எனும் தனங்களை உடையவளே!பல அமுத மொழிகள் பேசும் திரு வாயினை உடையவளே!மதி போன்ற முகத்தில் தாமரை இதழ் போன்ற நெற்றியினையும், மீன் போன்ற கண்களையும் உடையவளே!காற்றில் அசையும் கொடி போல நின்று அருள் வழங்கும் தாயே! மயிலாடுதுறை ஈசனின் சக்தியே அபயாம்பிகைத் தாயே! 


                      மயிலாடுதுறைவளரீசன்.....


                                பல்லவி

                   மயிலாடுதுறைவளரீசன் மனங்கவர்

                   அபயாம்பிகையே கேசவன் சோதரி

                               அனுபல்லவி     

                    ஒயிலாக குயில் போல அமுத மொழிபேசும்

                    திருவாயுடைவளே மதி முகத்தாளே

                                     சரணம்

                     வடிவான திருவடியில் சதங்கையும் தண்டையும்

                     கிண்கிணி மணி படர்ந்த கொலுசுமணிந்தவளே

                      இடை பிரியாத அரைஞாணும் அழகுடனே

                      முத்தும் நவரத்தினமும்  பட்டுடையும் தரித்தவளே

                      பர அபரஞானமெனும் தனங்களையுடையவளே  

                      இரு புயமும் பொன் போற் சடையுமுடையவளே                  

                      கமலமலரிதழ் போல நுதலுடைய கயல்விழியே

                      காற்றில் அசைந்தாடும் கொடியிடையே உனைப்பணிந்தேன்

                       

        

                                           

                            

No comments:

Post a Comment