Tuesday, 10 September 2019

சும்மா





   

                                   சும்மா


                          அட சும்மா இருடானு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அப்பலாம் எனக்குத் தெரியாது சும்மா இருக்கிறது பெரிய விஷயம்னு. இப்பவும் பல பேருக்குத் தெரியாது. சரி அத்த விடுங்க. இந்த சும்மா இருக்கிறதுன்னா என்ன. சும்மா இருக்கறது பல தருணத்தில பல அர்தத்தில
உபயோகிக்கிற சொல். “சும்மா இருக்கிறது”  நடைமுறை வாழ்க்கைல பல நூறு வகையா பயன் படுத்தறாங்க. உதாரணமா

 “ சும்மா வந்தேன்” , சும்மா இருக்கான், சும்மா சொன்னான், சும்மா செய்வானா, சும்மா போகலாம், சும்மா வருவான், 
இப்படி படித்த பண்டிதர்கள், படிக்காத பாமரர்கள், எதற்கெடுத்தாலும் என்ன சொல்ல நினைத்தாலும், ‘சும்மா’ வை மட்டும் விட்டு வைக்காமல் மறக்காமல் சொல்லி விடுகிறார்கள். பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில்  அடிக்கடி பயன்படும் ஒரு சொல்லாக ‘சும்மா’ என்பது விளங்குகிறது. இச்சொல்லின் பொருளினை தெரிந்தோ, தெரியாமலோ எல்லோரும் பயன்படுத்திவருகின்றனர்.
வேலை வெட்டி இல்லாமல் இருத்தல், அமைதியாய் இருத்தல், பயனில்லாமல் இருத்தல், அக்கறையில்லாமல் இருத்தல்,அடிக்கடி என்று பல பொருள்களில் இது வழங்கிவருகிறது.
பழந்தமிழ் இலக்கியத்திலும் சும்மா ஆளப்ட்டிருக்கிறது. காளமேகப் புலவர் பாடலில்
பெருமாளும் நல்ல பெருமாள்: அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்:- பெருமாள்
இருந்த இடத்தே சும்மா இராமையினால் ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதைப் பார்!’
ஒன்றும் செய்யாதிருத்தல் என்ற கருத்தில் பாடியுள்ளார்.
அருணகிரியாரும்  கந்தரனுபூதியில் தற்போதம் நீங்கி அவனருளே வேண்டி சும்மா இருக்கும் உயர்நிலையைப் பாடியுள்ளார்.
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே..’
ஆக, சும்மா இருத்தல் என்பது மஹாவாக்கியமாக உபதேசிக்கப்பட்டு  வருவதையும் கடைப்பிடிப்பதற்கு கடினத்தன்மை உடையதாயினும் மிகப்பெரும் சீர்மையை தரவல்ல ஒன்று என்பதையும் யோசிக்கோணம்.
“சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன்;
அம்மா பொருளிதென அடைய விழுங்கினனடி”
என்பது அருணகிரியாரின் பின் தொடரும் பட்டினத்தாரின் கூற்று.
தாயுமான சுவாமிகளும் “சும்மா இருக்கும் சுகம் ஒன்றறியேன் பராபரமே” என்று குறிப்பிடுகிறார். சும்மா இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்ற கேள்விக்கு ஒரு பாடலில் மிக நீண்ட பட்டியலே தந்திருக்கிறார்.
ஆக “ சும்மா இரு “, “கம்னு கிட “,  என்பது ஒரு மகா வாக்கியம்.  நடை முறையில் பயன்படுத்தப் படும் பொருள் வேறு உண்மையான அர்த்தம் வேறு. 
 இத்தத்தான் அம்மா சும்மாஇருடானு சொன்னாங்களோ! 
 எல்லோரும் இன்பற்றிருப்பதுவேயன்றி வேறொன்ற றியேன் பராபரமே 🙏 


No comments:

Post a Comment