விரைந்தெனையாட்கொள்ள...
பல்லவி
விரைந்தெனையாட்கொள்ள மனமில்லையென்றாலும்
குறையொன்றுமில்லை ஶ்ரீ ராமச்சந்திரா
அனுபல்லவி
கறை பிறவிப்பிணி நீங்க வேண்டுமென வேண்டியே
மறைமூர்த்தி கேசவனே உனையே துதித்தேன்
சரணம்
அரைகுறைப் புலமையால் அறிந்ததைப் பாடியுன்
பெருமைகளைப் புகழை உலகிற்குரைத்தேன்
திரையின் பின் நின்று காட்சி தர மறுத்தாலும்
இறைவனே ஶ்ரீராமா உனையே துதித்தேன்
சனக சனந்தன முனிவர்கள் துதித்திடும்
தனிப்பெரும் தெய்வமே தசரத ராமா
கனியளித்துபசரித்த சபரிக்கு மோட்சம் தந்த
தினகர குலத்தோனே தீனசரண்யனே
தினமுனையே துதிக்கும் ஆஞ்சநேயனுக்குன்
மனத்திலிடம் தந்த சீதாராமனே
நரர்சுரர் நான்முகன் நாரதரிந்திரன்
கரம் பணிந்தேத்தும் பட்டாபிராமனே
தனம் புகழ் போகம் தேடியலைந்திடும்
மனிதர்கள் பின்னே செல்லா நிலை தருவாய்
உனது நாமமே துதித்திடுமடியார்கள்
புனிதர்களுறவை எனக்களித்திடுவாய்
No comments:
Post a Comment