மகா விஷ்ணு
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் மகாவிஷ்ணுவை
பங்கய நாபனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனை
திங்கள் திருமுகத்தாள் சீதேவி நாயகனை
சரணம்
மங்களங்கள் தந்தருளும் மாயனை மாதவனை
இங்கிருக்கும் உலகுயிர்க்கு உட்பொருளாயிருப்பவனை
பங்கம் விளைவிக்கும் மாயையை விலக்கிடும்
பொங்கரவணை துயிலும் பாற்கடல்வாசனை
சங்கரன் நேசனை சாரங்கபாணியை
இங்கெழுந்தருளிய அர்ச்சா மூர்த்தியை
அங்கம் துலக்கி வாச மலர் தூவி
எங்களைக் காத்தருள வேண்டுமெனத்துதித்து
No comments:
Post a Comment