கிழிந்த காகிதம்
( I)
எனது வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கும் இன்ப நாடகம்
கனவும் நினைவும் கலந்து புனைந்த காதல் காவியம்
நீயும் நானும் மணம் புரிந்து வாழ்ந்த நாளெல்லாம்
மனதில் உன்னை வரைந்து மகிழ்ந்த இனிய ஓவியம்
தினமும் கண்டு இன்பம் கொண்ட ஆசை ஆயிரம்
உனக்கு நானும் எனக்கு நீயும் என்றிருந்ததும்
நமக்குப் பிள்ளை பிறந்த போதும் குறைந்ததேயில்லை
நாளும் நகர்ந்து இளமை குறைந்தும் நம் வாழ்வில் குறைவில்லை
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
(II)
ஊரார் உற்றார் வியந்து பார்த்து கண்கள் பட்டதோ
ஊழ்வினையால் நமக்கு வந்த பாழ்வினைப் பயனோ
காலனுன்னை பிரித்தெடுத்து கொண்டு சென்றது
தனிமை தந்து என்னை நீயும் பிரிந்து சென்றது
வேகமாக சோகமென்னை சூழ்ந்து கொண்டது
பிரிவின் கொடுமை எந்தன் நெஞ்சை பிழிந்தெடுத்தது
உனது நினைவு மனதில் தோன்றி வாட்டி வதைத்தது
எனது வாழ்க்கை பறந்து செல்லும் கிழிந்த காகிதம்
No comments:
Post a Comment