ரயில் பயணம்
அருகில் இருக்கையில் பல விதமாய்
அமர்ந்திருந்தனர் மனிதர் பலர்
இன்னும் சிலபேர் ஆங்காங்கே
நின்றும் நடந்தும் பயணித்தனர் .
பேச்சும் கூச்சலும் குறைவின்றி - முழு
மூச்சுடன் பெட்டியில் நடந்தேற ,
மழலையை மடிவைத்துத் தந்தையரும்
குழந்தைக்குப் பாலூட்டுமன்னையரும்
அவரவர் செயலில் கவனம் கொள்ள ;
பெட்டிக்குள் சின்னஞ்சிறு உலகொன்று
தானே இயங்கத்துவங்கியது !
சுமந்து செல்லும் ரயில் வண்டியும்
விரைந்து பயணம் தொடங்கியது
பயணம் செய்யும் மனிதரெல்லாம்
உறவாய் நட்பாய் சேர்ந்திருந்தார்
வழியில் வரும் பல நிறுத்தங்களில்
இறங்கினர் ஏறினர் பயணியர்கள்
நெருங்கி நட்பும் உறவுமாக
ஒருவருக்கொருவர் பழகிடினும்
அவரவர் நிறுத்தம் வந்தவுடன்
இறங்கிச்சென்றனரனைவருமே
வாழ்க்கையும் இதுபோலொரு பயணம்
No comments:
Post a Comment