தாரமேயென் தாய்
ஃ
வண்ணத்துப் பூச்சியாயென் வாழ்வில் வந்தாய்
கண்ணசைத்துப் பலகோடி கற்பனைகள் தந்தாய்
எண்ணத்தில் சேர்ந்தென் உயிர்த்துடிப்புமானாய்
தண்மதியாய்த் தாரகையாய் என்னெதிரில் திரிந்தாய்
உண்ணும் உணவளித்தாய் உறக்கத்திலும் அருகிருந்தாய்
கண்மணி போலெனைக்காத்து உறுதுணையாயிருந்தாய்
மண்ணும் விண்ணுமெனைப் போற்றும்படிச்செய்தாய்
கண்ணுக்குக் கண்ணாக பிள்ளை வரமெனக்களித்தாய்
மண்ணில் நம் பரம்பரையை இனிது வேரூன்றச்செய்தாய்
பெண்ணினத்தின் பெருமைக்கு இலக்கணமாயமைந்தாய்
எண்ணும் போதெல்லாம் என்னருகே நீயிருந்தாய்
கண்ணுறக்க மில்லாமல் நான் தவித்த போதெல்லாம்
பண்ணிசைத்துப் பலநேரம் தாலாட்டுப் பாட்டிசைத்தாய்
கண்ணே நீயென் தாரமல்ல நீயேன் தாய்
*** *** *** *** ***
பெண்ணே உன் பெருமை நானுரைக்கும் முன் பறந்தாய்
மண்ணிலென்னைத் தனி மரமாய் பரிதவிக்கச் செய்தாய்
விண்ணுலகில் இடம் தேடி ஏனோ சென்றமர்ந்தாய்
No comments:
Post a Comment