Saturday, 17 April 2021

மகாதேவியே

 தேவி அஷ்டகம்

அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத் துதியை, தேவி அஷ்டகம்  எனப்போற்றுவர்.

ஸ்ரீகணேஸாய நம:

மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்

பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்

கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்

பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்

கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்

மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்

கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.

காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்

ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்

கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.

ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்

ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.

தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்

முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்

கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்

மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்

கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.

ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்

ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்

(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)

கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.


                                           மகாதேவியே......


                                                   பல்லவி

                                      மகாதேவியே கேசவன் சோதரி

                                      மகமாயி நீயே எனக்கருள்வாயே

                                                   அனுபல்லவி

                                      அகாலமரணம் எனை அணுகாமலும்

                                      சுகானுபவம் பெற வேண்டியும் பணிந்தேன்

                                                        சரணம்

                                      மகாதேவன் துணைவி நீயே

                                      மகாதேவியே பவானி சங்கரி

                                      சம்சாரக் கடலினைக் கடந்திட உதவிடும்

                                      அம்மையே உந்தன் மலர்ப்பதம் பணிந்தேன்

                                      பக்தியுடன் உன்னை அனுதினம் பணிந்திடும்

                                      பக்தருக்கருளும் சக்தி தேவியே

                                      பக்தர்கள் வணங்கிடும் உத்தமி நீயே

                                      பரமசிவனிடம் அன்பு கொண்டவளே

                                      அன்னபூரணி  அகிலாண்டேச்வரி

                                      பூரண நிலவில் அனைவரும் பணிந்திடும்

                                      உன்னத இடப வாகனத்தில் அமர்ந்தவளே

                                      பிரமனும் தேவரும் தினம் துதிக்கும் ஈச்வரியே

                                      சிவராத்திரியிலும் நவராத்திரியிலும்

                                      புவனம் துதித்திடும் சிவசக்தி நீயே

                                      சிவனுக்குந்த கந்தமும் மலர்களும்

                                      அவனுக்களித்திடும் ஓங்காரப் பொருளே

                                      உலகினைப் படைத்தும் காத்துமழித்தும்

                                      அலகிலாவிளையாடல் பல புரிபவளே

                                       நலம் பெற முனிவர்கள் துதித்திடுமன்னையே

                                       துதித்திடும் பக்தருக்கு முக்தியளிப்பவளே

                                       தேவர்கள் துயர் துடைக்கும் உத்தமியே உமையே

                                       தேவதை முனிவர்கள் தினம் பணியும் தேவியே

                                       தேவருலகாளும் பராசக்தியே

                                        தேவாதி தேவன் மகேசன் துணைவியே

                                        கங்காதரன் சிவன் பங்கிலுறைபவளே

                                        தங்கமயமானவளே மங்களம் தருபவளே

                                        திங்கள் பிறையணிந்த மங்களாம்பிகையே

                                        மூவுலகாளும்  முக்கண்ணியே மாயே

                                        சரணடைந்தோரின் துன்பம் களைபவளே

                                        கரம் பணிந்தேத்தும் அடிவர்க்கெல்லாம்

                                         அனைத்து நல்னகளும் அள்ளி அளிப்பவளே

                                         உலகைப் படைத்தவளே உனைச்சரண டைந்தேன்.

                                         

                                         

                                                                       


        

                                       

                                       

                                        

                                 


   

                                       

          

                                      


                

No comments:

Post a Comment