என்ன பெயர்......
பல்லவி
என்ன பெயர் சொல்லியழைத்தாலும் ராமா
முன்னே வந்து அருள் தருபவன் நீயல்லவோ
அனுபல்லவி
புன்னகை முகத்தோனே புருஷோத்தமனே
சென்ன கேசவனே பன்னக சயனனே
சரணம்
மன்னன் தசரதனின் மனம் விரும்பும் தாசரதி
மன்னு புகழ்க் கோசலையின் அன்புச்செல்வனே
தென்னிலங்கையரக்கனை போரிட்டு வென்றவனே
சொன்ன சொல் காப்பவனே ரகுகுல மணிவிளக்கே
பொன் மானின் பின் சென்ற ஜானகிராமனே
முன்னம் சபரிக்கு மோட்சமளித்தவனே
இன்னும் அகலிகையின் சாபம் தீர்த்தவனே
சரணடைந்த குகனை சோதரனாய் ஏற்றவனே
அன்னை சீதையின் கரம்பிடித்த ரகுவரனே
இன்னமுதே ராகவனே அயோத்தி மன்னவனே
நன்னெறி காட்டிட மானுடனாய் பிறந்தவனே
கன்னலே தேனே கணப்புரத்துக் கருமணி
No comments:
Post a Comment