ஆழ்வார்களும் ஆசார்யர்களும் கவிச் சக்கரவர்த்தியும் வாக்கேயக்காரர்களும் நடந்து, வாழ்ந்து, பாடிப் பரவிய பிரதேசத்தில் நாமும் நடந்து செல்கிறோம் என்கிற நினைப்பே சிலிர்ப்பூட்டுவதாக இருக்கிறது.
அரங்கனைக் காண அலைமோதும் கூட்டம்! பக்தர்கள் வரிசை எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு நீண்டு வளைந்து செல்கிறது. ‘ரங்கா! ரங்கா!’ என்று கூவிக்கொண்டு, எதிர்பார்ப்பும் ஆவலும் ததும்ப நகரும் வரிசையில் நாமும் சேர்ந்து கொள்கிறோம்.
அதோ கருடாழ் வார் - ஆஜானுபாகுவாக இருந்தாலும் அடிபணியும் பாவனையில் இருக்கிறார். நம் மனமும் பணிகிறது. கொடி மரத்தை ஒருவாறு கடந்து கர்ப கிருஹத்தை நெருங்கிக் கொண்டிருக்-கிறோம். விபீஷ ணன் ஸ்ரீராமனிடம் பெற்று இழந்த பிரணவாகார விமானத்தின் கீழ் அமைந் துள்ள கருவறையில் ஆதிசேஷன் மேல் அறிதுயில் கொண்டிருக்கிறான் அரங்கன். வெள்ளிக் கவசமும் கண் மலர்களும் சாற்றியிருக்கிறார்கள். அவனது கருமேனியை அவை அழகாக வடிவெடுத்துக் காட்ட, நிலைப்படியை அடையும்போது திருமேனி முழுவதுமாக தரிசனமாகிறது. ஒயிலாகத் தலைக்குயரம் கொடுக்கும் வலக்கரம், நீண்டு துவளும் இடது கரம், செவ்வரியோடிய அப்பெரிய வாய கண்கள், உலக ரகசியங்களை ஒன்றுவிடாமல் அறிந்தும் அறியாததுபோல் மாயப் புன்னகையில் மலர்ந்துள்ள திருவாய் ‘ரமாந்தரங்கம்’ என்று தீக்ஷிதர் வர்ணிக்கும் மூலவர் அருகில் ஸ்ரீதேவி- பூதேவி இல்லை. அன்னியோன்னிய ஹ்ருதய வாஸினியாக திருமார்பில் மட்டுமே லக்ஷ்மி. ரங்கநாயகி தாயார், கமலவல்லித் தாயார், துலுக்க நாச்சியார் என்று அரங்கனுக்கு தேவியர் இருந்தாலும் அவர்களைத் தனித்தனிச் சன்னிதிகளுக்கு சென்றே நாம் தரிசிக்க வேண்டும். இப்போதைக்கு அரங்கனை தரிசித்த பரவசமே நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது.‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! என்று தொண்டரடிப் பொடியாழ்வார் அடித்துச் சொன்னதில் ஆச்சர்யமென்ன!ஆனால் ஆழ்வார்களின் பக்குவம் நமக்கேது? பணிந்து நின்று சடாரி சாற்றப்பெறும்போதும், துளசி தீர்த்தத்தை அருந்தும்போதும் பதறி பதறி வேண்டிக் கொள்கிறோம்.
பெருந்துயில் வளர் பொன் அரங்கா விழி மலர்ந்தருள் மணிரங்கா!
செந்திருமகிழ்ந்துறை அந்தரங்காவல்
வினைகளைந்தெனை ஆள் அரங்கா!
அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, தடுத்தாட்கொள்ளும் தயை நிதி அல்லவா?
நமது வேண்டுதலைக் கேட்டு, பள்ளி கொண்ட பெருமாள் முன் நிற்கும் உத்ஸவ ரங்கன் சிரிப்பதாகத் தோன்றுகிறது. அவனருகே ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியர்களும் சிரிக்கின்றனர். நமக்குப் பின் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு நகர்ந்தாலும் அரங்கனை மனக்கண்ணில் படம்பிடித்து, நெஞ்சத் திரையில் நிலை நிறுத்திக்கொள்கிறோம். அவரை இங்கே விட்டுச் சென்ற விபீஷணனும் அதைத்தான் செய்திருப்பான் போலும்!
पल्लवि
रङ्ग नायकं भावये
रङ्ग नायकी समेतं श्री
अनुपल्लवि
अङ्गज तातं अनन्तं अतीतं
अज-इन्द्र-आदि-अमर नुतं सततं
उत्तुङ्ग विहङ्ग तुरङ्गं
कृपा-अपाङ्गं रमा-अन्तरङ्गम्
चरणम्
प्रणव-आकार दिव्य विमानं
प्रह्लाद-आदि भक्त-अभिमानं
गण पति समान विष्वक्सेनं
गज तुरग पदाति सेनम्
दिन मणि कुल भव राघव-आराधनं
मामक विदेह मुक्ति साधनं
मणि-मय सदनं शशि वदनं
फणि पति शयनं पद्म नयनम्
अगणित सु-गुण गण नत विभीषणं
घन-तर कौस्तुभ मणि विभूषणं
गुणि जन कृत वेद पारायणं
गुरु गुह मुदित नारायणम्
ராகம்:
நாயகி; தாளம்: ஆதி பல்லவி: ரங்கநாயகம் பாவயே ஸ்ரீ ரங்கநாயகி சமேதம் ஸ்ரீ (ரங்க...)
அனுபல்லவி: அங்கஜதாத மனந்தமதீதம் அஜேந்த்ராத்யமரனுதம் ஸததம்
உத்துங்க விஹங்கதுரங்கம் க்ருபாபாங்கம் ரமாந்தரங்கம் ஸ்ரீ (ரங்க...)
சரணம்:
ப்ரணவாகார திவ்யவிமானம் ப்ரஹ்லாதாதி பக்தாபிமானம்
கணபதி ஸமான விஷ்வக்ஸேனம் கஜதுரகபதாதிஸேனம்
தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம்
மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம்
அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம்
குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் ஸ்ரீ (ரங்க...)
பொருள்: ரங்கநாயகியுடனான ரங்கநாதரை தியானிக்கிறேன். மன்மதனின் தந்தை; ஆதி - அந்தம் அற்றவன், அனைத்தையும் கடந்தவன்; பிரமன் மற்றும் இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவன்; கருடனை வாகனமாகக் கொண்டவன்; கருணை நிரம்பிய கண்களையுடையவன்; லக்ஷ்மிக்கு அந்தரங்கமானவன்.
பிரணவாகார விமானத்தை உடையவன். பிரஹலாதன் முதலான பக்தர்களால் வணங்கப்பட்டவன். விநாயகருக்கு ஈடான விஷ்வக்ஸேனரை ஸேனாபதியாய் உடையவன். முப்படைகள் உடையவன். சூரிய குலத் தோன்றலான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவன். முக்தியைத் தரவல்லவன். நவரத்தினங்கள் இழைத்த ஆலயத்தில், சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் ஆதிசேஷன் மீது துயில்பவன். தாமரைக் கண்ணன். ஒப்பற்ற குணவானான விபீஷணனால் பூஜிக்கப்பட்டவன். கௌஸ்துப மணியை அணிந்துள்ளவன். வேத பாராயணம் செய்யும் குணவான்களின் இறைவன். குருகுஹனுக்கு மகிழ்வூட்டும் ஸ்ரீமன் நாராயணன்.
திருவரங்க நாயகி…..
பல்லவி
திருவரங்க நாயகி உடனிருக்குமரங்கனை
திருமாலைக் கேசவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கருட வாகனனை திருவுறையும் மார்பனை
பிரமன் சுரபதி ரதிபதி வணங்கிடும்
சரணம்
பிரணவாகர விமானமுடையவனை
பிரகலாதன் பணிந்த பாதங்களுடையவனை
கரிமுகனுக்கீடான சேனை முதலியை
முப்படைக்கு தளபதியாய் வைத்திருப்பவனை
நவரத்தினம் பதித்த ஆலயத்துறைபவனை
பவளவாயனை மதிமுகத்தானை
புவனம் போற்றும் கமலக்கண்ணனை
சிவகுமரன் குகனை விரும்பும் நாராயணனை
தினகரகுலத்துதித்த ஶ்ரீராமன் துதித்தவனை
வனமாலை கௌஸ்துபமணிமணி புனைந்தவனை
வீடணனுமறையோரும் வணங்கிடும் பதத்தானை
ஆதிசேடனின் மீது துயில்பவனை
No comments:
Post a Comment