நல்லோர் நலம் பேணும்……
பல்லவி
நல்லோர் நலம் பேணும் ஶ்ரீரகுராமா
நற்குணம் நிறைந்தவனே நானிலம் காப்பவனே
அனுபல்லவி
வல்லரக்கன் ராவணனை வதைத்தவனே கேசவனே
கல்லைக்காரிகையாய்ச் செய்தவனே பரந்தாமா
சரணம்
முல்லைச்சிரிப்புதிர்க்கும் புன்னகை முகத்தோனே
நல்லோர் நலம் பேணும் நற்குணமுடையவனே
சொல்லொன்று வில்லொன்று இல்லொன்றென்றிருப்பவனே
வல்வினை தீர்த்தென்னை வாழ வைக்க வேண்டினேன்
நல்லோரின் வாழ்வே, இராமா!
நற்குணங்களையணிவோனே, இராமா!
அரவணிவோனால் தொழப்பெற்றோனே!
அறிஞர்களைக் காப்போனே! தான்தோன்றியால்
வந்திக்கப் பெற்றோனே! அண்டியோருக்கு வேண்டியதருள்வோனே!
இக்குவாகு குலத்தோனே! என்னைக் காப்பாய்;
நல்லோரின் வாழ்வே, இராமா!
நற்குணங்களையணிவோனே, இராமா!
அழகிய கண்களோனே! மா மணாளா! இலக்குமி விரும்பும் உடலோனே!
தாரக நாமத்தோனே! நன்னடைத்தையோனே! தசரதன் மைந்தா!
மதி வதனத்தோனே! அறங்காப்போனே!
கடத்துவிப்பாய், இரகுவரா! களங்கமற்றோனே!
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
நல்லோரின் வாழ்வே, இராமா!
நற்குணங்களையணிவோனே, இராமா!
அரவணிவோன் - சிவன்
தான்தோன்றி - பிரமன்
இக்குவாகு - இரகு குல முன்தோன்றல்
தாரக நாமம் - 'இராமா' எனும் நாமம் பிறவிக் கடலைக் கடத்துவிப்பதனால்
கடத்துவிப்பாய் - பிறவிக் கடலினைக் கடத்துவிப்பாய்