தருதுயரம் தடாயேல்
உன் சரணல்லால்
சரணில்லை
விரை குழுவு
மலர்ப்பொழில் சூழ்
விற்றுவக் கோட்டம் மானே!
அரிசினத்தால் ஈன்றதாய்
அகற்றிடினும் மற்றவள்தன்
அருள் நினைந்தே
அழுங்குழவி;
அதுவே போன்றிருந்தேனே.
பெருமாள் திருமொழி
ஐந்தாம் திருமொழி
குலசேகராழ்வார்
தருந்துயரங்களை…..
பல்லவி
தருந்துயரங்களைத் தடை செய்திடவே
பெருமாளே கேசவனே உனையன்றி யாருளார்
அனுபல்லவி
கரும வினைப் பயன் நீங்க,வருமிடர் காத்திட,
பெரும் பிணி பவக்கடல் கடந்திடத்துணை நீயே
சரணம்
அருமைத் தாயருள் வேண்டி அழும் பிள்ளை போலவும்
அரசன் கோல் நோக்கி வாழும் குடி போலவும்
அருங்கலத்தின் கொடி மீதமர்ந்திருக்கும் பறவை போல்
திருமாலே வித்துவக்கோட்டம்மானே வேண்டுகிறேன்
விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்விய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துக்கோடு என்றும், திருமிற்றக் கோடு என்றும் கூறுவர். 'விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். என் துன்பத்தை நீக்கா விட்டால் , தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், அரசனின் கோல் நோக்கி வாழும் குடி போலவும் உன் அருளையே எதிர்பார்த்து ஏங்கி இருப்பேன்!உன்னிடமன்றி வேறு யாரிடம் செல்ல முடியும்? விசாலமான கடலில் செல்லும் கப்பலின் பாய் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் பறவையைப் போல் வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை'என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச் சரணடைகிறார்.
No comments:
Post a Comment