Sunday, 24 September 2023

“ கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்”

 

         “  கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்”

  இங்கு நான் வந்திறங்கியது ஏப்பிரல் மாதம்.  குளிர் முடிந்து வெய்யில் காலத்தை நோக்கி நகரத்துவங்கும் நேம். சீதோஷ்ணம் பற்றிச் சொல்லும்படியாக ஏதும் முக்கியமாக இருக்கவில்லை. இதோ இப்ப செப்டம்பர் மாத்த்தின் கடைசி வாரம் வந்தாச்சு. ம், தாமரை எழுதிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருது.  நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, நீருக்குள் மூழ்கிடும் தாமரை, சட்டென்று மாறுது வானிலை…. ஆம் மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கின்றன. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் சட்டென்று  சில வாரம் கழித்து வண்ண வண்ண இலைகளெல்லாம் உதிர்ந்து விடுமாம்! நம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதமவை திறக்கும்போது  பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம். அமெரிக்காவின் அழகான இலையுதிர் காலத்தில் இங்குள்ள மரங்களில் இலைகள் எல்லாம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன் என்று ஒவ்வொரு வண்ணத்திலும் மாறி பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கும். எது எப்படியோ இந்த இலைகளின் அழகை பார்த்துக்கொண்டு ஒரு நதிக்கரையில் நடப்பதோ வண்டியை எடுத்துட்டு இரண்டு பக்க மரங்களின் அழகை பார்த்துட்டு அப்படியே நீண்ட தூர பயணம் போவதோ ஆனந்தம்.ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது. விஸ்கான்சில் செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்!) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேளை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். விஸ்கான்சில்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும்.  குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே. குளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர்.  குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று  போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். இலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.




No comments:

Post a Comment