Wednesday, 20 September 2023

அலகிலா விளையாடல்……

 

                 அலகிலா விளையாடல்……


                           பல்லவி         

        அலகிலா விளையாடல் பல புரியும் கேசவனே

        சுலபமாய்க் குறை நீக்கி ஏற்றருள்வாயே

                         அனுபல்லவி

        உலகுண்ட வாயனே உனையன்றி வேறுதுணை

        உலகில் எனக்கில்லை என்றறிந்த மாயோனே     

                             சரணம்                    

         புலன்களைந்தும் வெவ்வேறு வழிசெல்ல

         மலந்தள்ளுமுடலோ அதன் பின்னே செல்ல

         பலமிலா நாவோ  பொய்யொன்று பேச

         நலம் கருதி நான் செய்யும் வழிபாட்டை     

                  

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு

வினை வேறு பட்டவர்பால் மேவும் — அனமே

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே

கனமொன்று மேலவர் தங் கண்

அனமே= அன்னம் போன்ற நடையுடைய அழகியே! கேள்!

வினை வேறுபட்டவர்பால்= நல்ல செய்கை இல்லாத கீழோரிடத்தில்

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் = மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும்

கனம் ஒன்று மேலவர் தங்கண் = பெருமை மிக்க பெரியோரிடத்தில்

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே = மனமும், சொல்லும், செயலும் ஒன்றேயாம்.

தமிழில் இதற்கு அழகான மூன்று சொற்கள் உண்டு:

வாய்மை = வாயினால் தீமை செய்யாதிருத்தல்

உண்மை = உள்ளதாற் பொய்யாதொழுகுதல்

மெய்மை = உடலினால் தீங்கு செய்யாதிருத்தல்.


No comments:

Post a Comment