நாராயணா உந்தன்…..
பல்லவி
நாராயணா உந்தன் நாமமே தினம் துதித்தேன்
பாரா முகமேனோ மாதவனே கேசவனே
அனுபல்லவி
ஶ்ரீராமச்சந்திரனாயவதரித்தவன் நீயே
ஓராயிரம் பெயருடைய பரம்பொருளும் நீயே
சரணம்
கார்குழலாள் கோமளவல்லியின் கரம் பிடித்த
ஆராவமுதன் சாரங்கபாணியும் நீயே தானன்றோ
மாரனையும் பிரமனையும் படைத்தவனே பரந்தாமா
பாரோர் பணிந்தேத்தும் பரமபத நாதனே
ஊர் போற்றும் உத்தமனே உலகுண்டவாயனே
பார்த்தன் தேர் நடத்திய பார்த்தசாரதியே
கீர்த்திமிகு திருமகளை மார்பில் வைத்திருப்பவனே
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனே
சீர்மல்கும் திருமலைமேல் நிற்கும் ஶ்ரீநிவாசனே
ஆர்த்தெழுந்த இரணியனை வதைத்த நரசிம்மனே
கார்வண்ணக் கண்ணனே கமலநாபனே
போர் நடத்தி ராவணனைக் கொன்ற ரகுராமனே
No comments:
Post a Comment