Saturday, 12 September 2026

பரம புருஷன்……

 


                  பரம புருஷன்……


                         பல்லவி   

        பரம புருஷன் கேசவனைத்துதித்தேன்

      திருமகளை மார்பணியாய் வைத்திருக்கும்

                  அனுபல்லவி

       அரனயனிருவரும் கரம் பணிந்தேத்தும்

       பரவாசுதேவனை ஶ்ரீமன் நாராயணனை

                     சரணம்

      கரன்முரனை கொன்றழித்த மதுசூதனனை 

      கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்

      அரவிந்த நாபனை அரவிந்த லோசனனை 

      சரணடைந்து தூமலர் தூவி

         

         

       


       

      


 

      





Oh supreme lord, You are unparalleled. I surrender to you. Your heart is Lakshmi's abode.

Your navel is lotus like.You are lotus eyed. You are the Lord of multitudes of Devatas and sages. You are care taker of the cows. You are bestower of boons

You are absolute. You have four arms. You wield conch and discus. Oh Lord of Venkata hill, you are marvellous. Anjaneya praises you.

Tuesday, 8 September 2026

இன்னமேன் தாமதம்…..




                    இன்னமேன் தாமதம்…..


                                     பல்லவி


       இன்னம் ஏன் தாமதம் சென்ன கேசவனே

       என்னைக்காத்தருள எனையாளும் ஈசனே


                       அனுபல்லவி 


       பன்னகசயனனே  பாற்கடல்வாசனே

       உன்னருளாலன்றோ உலகம் இயங்குவது

                                      சரணம்

       முன்னமகலிகையின் சாபம் தீர்த்தவனே

       இன்னும் சபரிக்கு மோட்சமளித்தவனே

       அன்றிலங்கை சென்று சீதையை மீட்டவனே

       மன்னு பரந்தாமனே ஶ்ரீமன் நாராயணனே


        

         

    

         

    

                                          

Sunday, 30 August 2026

நமச்சிவாய ……

 

          நமச்சிவாய ……


                         பல்லவி

       நமச்சிவாய என்னும்  மந்திரம் தன்னையே

        சதா இனி என் நாவில்


                     அனுபல்லவி 

      இமவான் மகள் உமையவள் நாதன்

       கேசவன் நேசன் ஈசனைப் பணிந்து  - ஓம்


                        சரணம்

       அமரரும் முனிவரும் அமரேந்திரனும் 

      குமரன் கணபதி நந்தியும் பணியும்

       அமிர்தகடேச்வரனைக் காலகாலனை

        எம பயம் நீங்கவும் நல்வாழ்வு பெறவும்

        

          

        



Wednesday, 26 August 2026

என்ன வடிவோ…….

 


                          என்ன வடிவோ…….


                                       பல்லவி 

                 என்ன வடிவோ என்ன அழகோ  கேசவா

                 என்னை மயக்குதே உன்னெழில் வடிவம்

                                     அனுபல்லவி 

                  பன்னகசயனனே  பாற்கடல் வாசனே

                  தென்னிலங்கை சென்று ஜானகியை மீட்டவனே

                                         சரணம்

                    கன்னங்கரியவன் நீ என்றாலும் கூட

                     புன்னகையாலுலகை மயக்கும் மாயக்கண்ணனே

                     அன்னை தேவகியின் அனபு மைந்தனே

                     உன்னைவிட அழகு மூவுலக்கில் எவருமுண்டோ

                       


                      




   

Saturday, 15 August 2026

யாரென்ன சொன்னாலும்…..

 



           யாரென்ன சொன்னாலும்…..

                 

                                   பல்லவி


     யாரென்ன சொன்னாலும் உனைப்போற்றிப்பாடுவேன்

     பாரெங்கும் புகழ் விளங்கும் சென்னகேசவப்பெருமாளே


                     அனுபல்லவி 


     கார்வண்ணமேனியனே கமலக்கண்ணனே

      நீர்மலைமேல் நின்றருளும் நீர்வண்ணப்பெருமாளே

                        சரணம்

     ஆர்பரிக்கும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே

     தேர் நடத்தி ப்பார்த்தனுக்கு துணை நின்ற சாரதியே

     மார்பணியாய்த் திருமகளை வைத்திருக்கும் மாதவனே

     ஊர்தியாய்க்கருடனை வைத்திருக்கும் திருமாலே



      

      

        

     





மலையப்ப சுவாமியை

      


                     

                         மலையப்ப சுவாமியை

                         பல்லவி

     மலையப்ப சுவாமியை மனமாரத்துதித்தேன்

  சிலையாக எழுந்தருளி திருமலையில் காட்சி தரும்  

                      அனுபல்லவி

       மலர்மாலையலங்காரம் கலையாத சிங்காரம்

       பலர்காண வீற்றிருக்கும் திருவேங்கடமுடையானை


                         சரணம்

         அலமேலுமங்கையும் பத்மாவதித்தாயாரும்

         உடனிருந்து போற்றும் வெங்கடாசலபதியை

      சுலபமாய் பக்கதர்கள் குறைதீர்க்கும் கேசவனை

       அலங்காரப்பிரியனை ஏழுமலையானை

           

           

           

      

Thursday, 13 August 2026

வரமோ சாபமோ……

 


                                    வரமோ சாபமோ……


                                               பல்லவி 

                           வரமோ சாபமோ இரண்டும் வேண்டேன்

                           கரம் பணிந்தேத்தி உனையே துதித்தேன்

                                              அனுபல்லவி

                            அரனயன் போற்றும் ஆதி கேசவா

                            சரணடைந்தேன் உந்தன் பாதகமலமே

                                                  சரணம்

                             மரணம் பிறப்பென்னும் மாயச்சுழலகலும்

                             வரமொன்றினையே உன்னிடம் வேண்டினேன்

                              சுரக்கும் ஊற்று போல் கருணை நிறந்த

                               பரந்தாமனே நாராயணனே

                             


Sunday, 9 August 2026

மயிலை வளர்…..



              மயிலை வளர்…..


                      பல்லவி


     மயிலை வளர் கற்பகமே அற்புதமே

     கயிலைநாதன் கபாலீசன் மனம் விரும்பும்


                     அனுபல்லவி 


     மயில் வாகனன் நர்த்தன கணபதி போற்றும்

     தையலே உமையே கேசவன் சோதரி


                        சரணம்


    இயலிசை நாட்டிய நாடகம் ரசித்திடும்

    ஒயிலே சயிலேந்திரன் பெற்ற மாதவமே

    உயிருடல் தந்து எனைக்காக்கும் அன்னையே

    நோயம் பவக்கடல் கடந்திட எனக்கருள்வாய்

கண்டிக்கதிர்காம…….

 


                        கண்டிக்கதிர்காம……

                                      பல்லவி

                   கண்டிக்கதிர்காமக் கந்தனைத்துதித்தேன்

                    பெண்டிர் வள்ளி தேவானை மணாளனை

                                   அனுபல்லவி 

                    கண்ணன் கேசவன் மருகனை முருகனை

                     எண் திசையும் போற்றும் முத்துக்குமரனை

                                         சரணம்

                      கண்கவர் அழகனைக் கார்த்திகேயனை

                       விண்ணோரும் மண்ணோரும் போற்றும் சிவகுமாரனை

                       தண்மதி முகத்தோனை சிங்காரவேலனை

                       பண்ணிசைத்து வணங்கி தாள் பணிந்து



                       

   





Saturday, 8 August 2026

கோவிந்தனை நினை மனமே…….

 


                     கோவிந்தனை நினை மனமே…….

                            பல்லவி 

                 கோவிந்தனை நினை மனமே

                 மூவாசைப்பிணி போக்கும் முன்வினை பயன் நீக்கும்

                              அனுபல்லவி

                  தேவாதிதேவனைக் கேசவனை மாதவனை

                   நாவாரப்பாடி மனமாரத்துதித்து

                                  சரணம்

                   ஆவினங்கள் மேய்க்கும் கண்ணனை அச்சுதனை

                   தேவருக்கமுதளித்த திருமாலை  முகுந்தனை

                   மூவருக்கும் முதல்வனை முழுமுற்கடவுளை

                   காவாயென வேண்டி கரம் கூப்பி வணங்கி 



                    

                   

                    

                      

                           

Friday, 7 August 2026

எழில் கொண்ட…..




 “பாடல் கண்டேன் பாடல் புனைந்தேன்”


           எழில் கொண்ட…..


                   பல்லவி

எழில் கொண்ட உன்னியவன் பதம் காண

விழைந்ததன்றி வேறெதுவும் வேண்டேன்

                அனுபல்லவி 

 குழலேந்திய குருவாயுரப்பனைக்கேசவனை

 மழலையில் வெண்ணையுண்ட வாயனை

                   சரணம்

சுழல் சக்கரமேந்திய ஶ்ரீமன் நாராயணனை

ஆழியில் கிடந்துறங்கும் கேசவனை மாதவனை

அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் பிரமனும்

தொழும் வண்ணம் பிரதாபமுடையவனை

                    *****

சோதியுடற் சார்த்திய தூவெண்ணெய் நாற்றமுடன் 

பாதவெழில் காணப் பரிதவிக்கும் பக்தியுடன்

ஊதுகுழ  லேந்திய  உன்னியவன் சந்நிதியில் 

ஏதெனக்கு வேண்டுவேன் சொல்?**

 

 **  வரைபடம் கவிதை ‘வித்யாசுப்பிரமணியம்’

Tuesday, 30 June 2026

கால நேரம்……

 



                            கால நேரம்……

                                      பல்லவி

              கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்

              மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்

                                   அனுபல்லவி

                நீலவண்ணன் நீயே பாலகோபலனே

                ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே

                                      சரணம்

                சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட

                 பாலராமனே ஜானகி லோலனே

                 கோலமயில் பீலி கொண்டையில் சூடிய

                 பாலகோபாலனே நவநீதக்கண்ணனே

                    





Saturday, 27 June 2026

எப்படி பாடினால்……




                   எப்படி பாடினால்……


                             பல்லவி

         எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்

         அப்படி பாடுகிறேன்  சென்ன கேசவா

                           அனுபல்லவி

          அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்

          முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல் 

                                சரணம்

            எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி

            தப்பேதும் நான் செய்தவனில்லை

             அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்

             ஒப்பிலா அப்பனே  நாராயணனே

             

             

             

   



Monday, 20 April 2026

பாரில் உனையன்றி….

 


          பாரில் உனையன்றி….


                        பல்லவி


 பாரில் உனையன்றி தாயே  பராசக்தி

 வேறு யார் துணையெனக்கு  பராசக்தி


                    அனுபல்லவி


நேரில் நின்றுனைத்துதித்தேன் பராசக்தி

கோரிக்கை ஏற்றிடுவாய் தாயே பராசக்தி


                      சரணம்


 மாரியே பராசக்தி மகிடனை 

     வதைத்தவளே

 சேரிடமறியாமல் சேர்ந்து தீச்செயல் பல 

   புரிந்தேன்

 ஆறுதல் தந்தெனையே ஆண்டருள்வாய்  

     தாயே

  யாருக்கும் தீமை செய்யா வாழ்வெனக் 

    கருள்வாயே


 

 கற்ற கல்வி பெற்ற செல்வம் எதுவும் 

     சதமல்ல

 சுற்றம் சுகமெல்லாம் துறந்து உன்னைச்

 சரணடைந்தேன்

 பற்றற்ற நிலை பெறவே தாயே பராசக்தி

 உற்ற துணை நீயே சென்னகேசவன் 

     சோதரியே

                          *****


 दाशवदनाय विद्महे

ज्वामाळायाई धीमही

तन्नो परशक्ति प्रचोदयात्  


 ாம் பத்துத் திசைகளிலும் இருப்பவளை அறிந்துகொள்வோம்.

ஒளிரும் மாலை அணிந்தவளைத் தியானிப்போம்.

அந்தப் பராசக்தி எங்கள் புத்தியை/அறிவை ஒளிரச் செய்யட்டும்.

Sunday, 19 April 2026

காமாக்ஷி….

 


               காமாக்ஷி….


                       பல்லவி


காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்

பாமரர் கொண்டாடும் ஜொன்னவாடா தலத்துறை


                    அனுபல்லவி


மாமாயன் கேசவன் மனம் விரும்பும் சோதரி

மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி


                     சரணம்


 நாமங்களாயிரமுடைய நாராயணி

 நாமகள் பூமகள்  சாமரம் வீசும்

 கோமகளே ஶ்ரீராஜராஜேச்வரி

 பூமண்டலம் போற்றும் புவனேச்வரி


ஓமெனும் மந்திரத்தினுட்பொருள் நீயே

காமனுக்கருள் செய்த காமேச்வரியே

தேமதுரத் தமிழாலுனைப் போற்றிப்பாடி

தூமலர் தூவியுன் மலரடி பணிந்து


                                  ஜொன்னாவாடா காமாக்ஷி 


ஜொன்னாவாடா காமாக்ஷி மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் ஜொன்னவாடாவில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இக்கூட்டத்தில் நெல்லூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆலயம் பெண்ணாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது 1150 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காமாட்சி தேவி சக்தியின் அவதாரமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரால் இங்கு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டது. நவ ஆவரண பூஜையும், ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமிக்கும், ஸ்ரீ காமாக்ஷி தாயிக்கும் தினமும் கல்யாணோற்சவம் நடைபெறும். தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சக்கரம் பிரம்மோத்ஸவம் தெலுங்கு மாதத்தின் வைசாக மாசத்தில் நிகழ்த்தப்பட்டது மற்றும் தசரா விழாவின் ஒன்பது நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது 1150 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

Tuesday, 14 April 2026

ஶ்ரீராம எனறழைத்து…..

 



                          ஶ்ரீராம எனறழைத்து…..


                                          பல்லவி


                     ஶ்ரீராமா என்றழைத்து உனையே துதித்தேன்

                     நீயே கலியகத்தில் கண்கண்ட தெய்வம்


                                       அனுபல்லவி

  

                       நாராயணன் மாதவன் கேசவனென்று                       

                       ஓராயிரம் பெயர் உனக்கிருந்தாலும் 


                                          சரணம்


                        தீரா வினை தீர்க்கும் தினகரகுலத்தோனே

                        காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த 

                        மாராபி ராமனே மன்னு பரந்தாமனே

                        பாராளும் வேந்தனே பரமபத நாதனே


                         

                           

                  




         

Monday, 13 April 2026

கேசவா மாதவா…..

 


                      கேசவா மாதவா…..


                                    பல்லவி 


                  கேசவ மாதவ கோவிந்தா் என்றழைத்து

                  ஆசையுடனுனைத் துதித்துப் போற்றினேன்

     

                                  அனுபல்லவி


                   ஈசனும் பிரமனும் போற்றி வணங்கிடும்

                   பேசும் தெய்வமே கலியுக க்கடவுளே

     

                                     சரணம் 

                    காசினியோர் கொண்டாடும் மாசிலாமணியே

                    கேசியெனும் குதிரை முக அரக்கனைக்கொன்றவனே

                    பாசத்தளைகளைக் களைந்திடும் பரந்தாமனே

                    வாச மலர் தூவியுன் மலர்ப்பதம் பணிந்து

                     

                   


 

Tuesday, 7 April 2026

சாமிநாதன் எனை…..

 



                                                 சாமிநாதன் எனை…..


                                                          பல்லவி 

                                     சாமிநாதன் எனைக் காத்தருள வேண்டும்                                                            

                                     வள்ளி மணாளன் வேலாயுதன் சிங்காரவேலன்

                                                          துரிதம்

                                     பாமரர்  பண்டிதர் நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்

                                     பாமகள் பூமகள் சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்                                      

                                                       அனுபல்லவி

                                     காமனை எரித்த சிவன் மகன் கார்த்திகேயன்

                                     தாமரை நாபன் கேசவனின் அன்பு மருமகன் 

                                                          சரணம்

                                      பூமிநாதன் வாமத்திலமர்ந்திருக்கும் 

                                      காமேச்வரி மலைமகள் கொஞ்சும் குமரன்

                                      மாமறைக்குப் பொருள் சொன்ன சிவகுமரன்

                                      பாமரரும் பண்டிதரும் வணங்கும் தமிழ்க்கடவுள்

                                       

   

                                       

    

         



Thursday, 12 March 2026

நாராயணனே……

 

      


                                       நாராயணனே……


                                           பல்லவி

 

                              நாராயணனே முழுமுதற் கடவுள்  

                             ஶ்ரீராமனுமவனே ஶ்ரீகிருஷ்ணனுமவனே


                                         அனுபல்லவி

                             பேராயிரமுடைய  சாரங்கபாணியவன்

                             ஆராவமுதன் அழகியமணவாளன் 


                                                சரணம்


                             தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதன்

                             காரார் குழலாள் ஶ்ரீ மகாலக்ஷ்மியை 

                             மார்பினில் வைத்திருக்கும் வைகுண்டவாசன்

                             பாரோர் பணிந்தேத்தும் குறையில்லா கோவிந்தன்

                                                    *******


                                  “ குறையில்லா கோவிந்தன் “

லியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள். அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா' என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா' என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்று சொல்லிப் போற்றுகிறார். அவதாரத்தில் கிருஷ்ணாவாதாரமே பிடிக்கும் என்பதுபோல்,  நாமங்களில் 'கோவிந்தா...' என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான் மாயக்கண்ணன்..

அந்தப் பெயரில் அப்படி என்னதான் உள்ளது ?  'கோவிந்தா' என்ற சொல் மட்டுமே அவனது பத்து அவதாரங்களையும் குறிக்கும்.   

'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பாற்றுபவன். இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன்  என்று பொருள். கோ என்பதற்கு வேதம் என்றும் பொருள். வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தையும் கோவிந்தம் குறிக்கிறது. கோ என்றால் பர்வதம் என்ற பொருளும் உண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவு ஊட்டுகிறது. 

பூமியையும் கோ எனலாம். கோவிந்தா எனும்போது  பூமியைத் தனது கொம்பினால் தூக்கிய வராக அவதாரமும் மனதில் தோன்றுகிறது. நரசிம்மனுக்கும், வாமனனுக்கும், பரசுராமனுக்கும் கோவிந்தன் என்பது மற்றுமொரு பெயரே. கோ என்றால் ஆயுதம். சமுத்திரத்து நீரைச் சரித்து பூமியைக் கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயராயிற்று. 

கோ என்றால் பசு. பசுவை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்ற பெயராம். 

இப்படி, ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது.  கோவர்த்தன மலையைத் தூக்கிய காரணத்தால்  கண்ணனுக்கு கோவர்த்தனன் என்று பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்தான் இந்திரன்.

அப்படிப்பட்ட, ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனைத் தொழுது வணங்கினால், அவனது பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து வணங்கிய பலன் கிட்டும். இதையே 'குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் ஒன்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே..'  என்று நம்மாழ்வார் பாடிட, அதனை நன்குணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும், கோவிந்த நாமாவளியைப் பாடி மகிழ்ந்திட இருபத்து எட்டாம் நாளன்று அழைக்கிறாள் ..!!


                              

                                                                                                 

 


நித்தம் ஒரு புதுப்பாடல்…..

 


                         நித்தம் ஒரு புதுப்பாடல்…..


                                              பல்லவி

                   நித்தம் ஒரு புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட

                   உத்தமனே கேசவனே நீயனக்கு அருள்வாய்      

                                           அனுபல்லவி

                   பத்து தலை ராவணனின் கதை முடித்த ராகவனே

                   வித்தகர் ஞானியர் போற்றும் சத்தியமூர்த்தியே

                                              சரணம்

                    உத்தமி திருமகளைத் தன் மார்பில் சுமப்பவனே

                    நித்திலத்தொத்தெனும் நாமம்  உடையவனே

                    கத்தும் கடலலை  மீதுறங்கும்  திருமாலே

                    சித்தத்தில் வைத்து நான் துதிக்கும் நாராயணனே


       


                    

                     



    

                   


                    


               

Thursday, 22 January 2026

என்னைக்காக்க…..

 



                    என்னைக்காக்க…..


                                 பல்லவி


           என்னைக்காக்க உனையன்றி வேறு யாருளார்

           சென்ன கேசவனே செங்கமல நாயகனே

                              அனுபல்லவி

           புன்னை மரத்தடியே புல்லங்குழலூதி நிற்கும்

           கண்ணனே கார்மேகவண்ணனே கோவிந்தா

                                 சரணம்

            அன்னை தேவகியின் அன்புச் செல்வனே

            உன்னை நினைந்துருக்கும் ராதையின் மனங்கவர்

            கன்னலே தேனே கம்சனை மாய்த்தவனே

            சொன்ன வண்ணம் செய்த திருமாலே நாராயணா

           

Wednesday, 21 January 2026

உத்தமனே ஶ்ரீராமா…..

 


                                     உத்தமனே ஶ்ரீராமா…..


                                             பல்லவி

                             உத்தமனே ஶ்ரீராமா உனைக்கூவியழைத்தேனே

                             சத்தமுன் காதில் விழவில்லையா கேசவனே

                                            அனுபல்லவி

                             பித்தன் சிவன் போற்றிய நாமமுடையவனை

                             கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே

                                                சரணம்

                             எத்தனையோ ஜென்மங்களாய் செய்த பாவங்கள்

                             அத்தனையும் சேர்ந்தெனை வாட்டுதே

                             மொத்தமும் தொலையவே உனைத் துதித்தேன்

                             மெத்தனேனய்யா ஶ்ரீராமா உனக்கு


                            

Tuesday, 20 January 2026

ராஜமாதங்கி

 



                    ராஜமாதங்கி

சியாமளா அம்பிகை ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுபவள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆட்சி புரியும் பச்சை மரகதக் கல்லான மீனாட்சி அம்மன் ஆறு கால பூஜைகளிலும் ஆறு பெயர்களில் அருள்பாலிக்கிறார். ராஜமாதங்கி என்ற பெயரில் கல்வித் தாயாக அருள்பாலிக்கிறார்.

சியாமளா என்ற பெயரில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் செல்வத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். சாவித்ரி என்ற பெயரில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் அளிப்பவராக சிறக்கிறார். மந்த்ரிணி என்ற பெயரில் சகல பாவங்களையும் நீக்குபவராக செயல்படுகிறார். கௌரியாக சகல சுக சௌபாக்கியங்களையும் அருள்பவராக திகழ்கிறா.ர் மீனாட்சி என்ற பெயரில் உயிர்களை கண்ணை இமை காப்பது போல் காத்து இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை அளிக்கிறார்.

சியாமளா எனப்படும் மாதங்கி பச்சை நிறம் உடைய இவள் வீணை ஏந்தி இருப்பாள். கல்விக்கும் ஞானத்துக்கும் அதிபதி. கற்றவனுக்கு என்றும் அழிவில்லை என்பதை ராஜமாதங்கி வழிபாட்டின் மூலம் மாதங்கி மக்களுக்கு அருள்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ராஜமாதங்கி, சியாமளா சக்தி பீடம் எனவும் அழைக்கப்படுவதால் சியாமளா நவராத்திரி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மனை, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மீனாட்சி அஷ்டோத்திரம், மீனாட்சி நூற்றியெட்டு போற்றி போன்றவற்றைக் கூறி வழிபட்டு சியாமளா நவராத்திரியின் பரிபூரணமான அருளைப் பெறலாம். சியாமளா நவராத்திரி காலம் ஜனவரி 19 முதல் ஜனவரி 27 வரை உள்ள ஒன்பது நாட்களாகும்.