Thursday, 12 March 2026

நாராயணனே……

 

      


                                       நாராயணனே……


                                           பல்லவி

 

                              நாராயணனே முழுமுதற் கடவுள்  

                             ஶ்ரீராமனுமவனே ஶ்ரீகிருஷ்ணனுமவனே


                                         அனுபல்லவி

                             பேராயிரமுடைய  சாரங்கபாணியவன்

                             ஆராவமுதன் அழகியமணவாளன் 


                                                சரணம்


                             தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதன்

                             காரார் குழலாள் ஶ்ரீ மகாலக்ஷ்மியை 

                             மார்பினில் வைத்திருக்கும் வைகுண்டவாசன்

                             பாரோர் பணிந்தேத்தும் குறையில்லா கோவிந்தன்

                                                    *******


                                  “ குறையில்லா கோவிந்தன் “

லியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள். அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா' என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா' என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்று சொல்லிப் போற்றுகிறார். அவதாரத்தில் கிருஷ்ணாவாதாரமே பிடிக்கும் என்பதுபோல்,  நாமங்களில் 'கோவிந்தா...' என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான் மாயக்கண்ணன்..

அந்தப் பெயரில் அப்படி என்னதான் உள்ளது ?  'கோவிந்தா' என்ற சொல் மட்டுமே அவனது பத்து அவதாரங்களையும் குறிக்கும்.   

'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பாற்றுபவன். இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன்  என்று பொருள். கோ என்பதற்கு வேதம் என்றும் பொருள். வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தையும் கோவிந்தம் குறிக்கிறது. கோ என்றால் பர்வதம் என்ற பொருளும் உண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவு ஊட்டுகிறது. 

பூமியையும் கோ எனலாம். கோவிந்தா எனும்போது  பூமியைத் தனது கொம்பினால் தூக்கிய வராக அவதாரமும் மனதில் தோன்றுகிறது. நரசிம்மனுக்கும், வாமனனுக்கும், பரசுராமனுக்கும் கோவிந்தன் என்பது மற்றுமொரு பெயரே. கோ என்றால் ஆயுதம். சமுத்திரத்து நீரைச் சரித்து பூமியைக் கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயராயிற்று. 

கோ என்றால் பசு. பசுவை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்ற பெயராம். 

இப்படி, ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது.  கோவர்த்தன மலையைத் தூக்கிய காரணத்தால்  கண்ணனுக்கு கோவர்த்தனன் என்று பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்தான் இந்திரன்.

அப்படிப்பட்ட, ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனைத் தொழுது வணங்கினால், அவனது பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து வணங்கிய பலன் கிட்டும். இதையே 'குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் ஒன்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே..'  என்று நம்மாழ்வார் பாடிட, அதனை நன்குணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும், கோவிந்த நாமாவளியைப் பாடி மகிழ்ந்திட இருபத்து எட்டாம் நாளன்று அழைக்கிறாள் ..!!


                              

                                                                                                 

 


நித்தம் ஒரு புதுப்பாடல்…..

 


                         நித்தம் ஒரு புதுப்பாடல்…..


                                              பல்லவி

                   நித்தம் ஒரு புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட

                   உத்தமனே கேசவனே நீயனக்கு அருள்வாய்      

                                           அனுபல்லவி

                   பத்து தலை ராவணனின் கதை முடித்த ராகவனே

                   வித்தகர் ஞானியர் போற்றும் சத்தியமூர்த்தியே

                                              சரணம்

                    உத்தமி திருமகளைத் தன் மார்பில் சுமப்பவனே

                    நித்திலத்தொத்தெனும் நாமம்  உடையவனே

                    கத்தும் கடலலை  மீதுறங்கும்  திருமாலே

                    சித்தத்தில் வைத்து நான் துதிக்கும் நாராயணனே


       


                    

                     



    

                   


                    


               

Thursday, 22 January 2026

என்னைக்காக்க…..

 



                    என்னைக்காக்க…..


                                 பல்லவி


           என்னைக்காக்க உனையன்றி வேறு யாருளார்

           சென்ன கேசவனே செங்கமல நாயகனே

                              அனுபல்லவி

           புன்னை மரத்தடியே புல்லங்குழலூதி நிற்கும்

           கண்ணனே கார்மேகவண்ணனே கோவிந்தா

                                 சரணம்

            அன்னை தேவகியின் அன்புச் செல்வனே

            உன்னை நினைந்துருக்கும் ராதையின் மனங்கவர்

            கன்னலே தேனே கம்சனை மாய்த்தவனே

            சொன்ன வண்ணம் செய்த திருமாலே நாராயணா

           

Wednesday, 21 January 2026

உத்தமனே ஶ்ரீராமா…..

 


                                     உத்தமனே ஶ்ரீராமா…..


                                             பல்லவி

                             உத்தமனே ஶ்ரீராமா உனைக்கூவியழைத்தேனே

                             சத்தமுன் காதில் விழவில்லையா கேசவனே

                                            அனுபல்லவி

                             பித்தன் சிவன் போற்றிய நாமமுடையவனை

                             கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே

                                                சரணம்

                             எத்தனையோ ஜென்மங்களாய் செய்த பாவங்கள்

                             அத்தனையும் சேர்ந்தெனை வாட்டுதே

                             மொத்தமும் தொலையவே உனைத் துதித்தேன்

                             மெத்தனேனய்யா ஶ்ரீராமா உனக்கு


                            

Tuesday, 20 January 2026

ராஜமாதங்கி

 



                    ராஜமாதங்கி

சியாமளா அம்பிகை ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுபவள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆட்சி புரியும் பச்சை மரகதக் கல்லான மீனாட்சி அம்மன் ஆறு கால பூஜைகளிலும் ஆறு பெயர்களில் அருள்பாலிக்கிறார். ராஜமாதங்கி என்ற பெயரில் கல்வித் தாயாக அருள்பாலிக்கிறார்.

சியாமளா என்ற பெயரில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் செல்வத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். சாவித்ரி என்ற பெயரில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் அளிப்பவராக சிறக்கிறார். மந்த்ரிணி என்ற பெயரில் சகல பாவங்களையும் நீக்குபவராக செயல்படுகிறார். கௌரியாக சகல சுக சௌபாக்கியங்களையும் அருள்பவராக திகழ்கிறா.ர் மீனாட்சி என்ற பெயரில் உயிர்களை கண்ணை இமை காப்பது போல் காத்து இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை அளிக்கிறார்.

சியாமளா எனப்படும் மாதங்கி பச்சை நிறம் உடைய இவள் வீணை ஏந்தி இருப்பாள். கல்விக்கும் ஞானத்துக்கும் அதிபதி. கற்றவனுக்கு என்றும் அழிவில்லை என்பதை ராஜமாதங்கி வழிபாட்டின் மூலம் மாதங்கி மக்களுக்கு அருள்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ராஜமாதங்கி, சியாமளா சக்தி பீடம் எனவும் அழைக்கப்படுவதால் சியாமளா நவராத்திரி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மனை, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மீனாட்சி அஷ்டோத்திரம், மீனாட்சி நூற்றியெட்டு போற்றி போன்றவற்றைக் கூறி வழிபட்டு சியாமளா நவராத்திரியின் பரிபூரணமான அருளைப் பெறலாம். சியாமளா நவராத்திரி காலம் ஜனவரி 19 முதல் ஜனவரி 27 வரை உள்ள ஒன்பது நாட்களாகும்.

Monday, 19 January 2026

கால நேரம் பாராமல்…..



                           கால நேரம் பாராமல்…..


                                       பல்லவி

                  காலநேரம் பாராமல் உனையே துதித்தேன்
                  மாலனே கேசவனே ஶ்ரீமன் நாராயணனே

                                      அனுபல்லவி
    
                  ஞாலமுண்டவாயனே. ஶ்ரீவாசுதேவனே
                  ஆலிலை மேல் துயின்ற வடபத்ர சாயியே 

                                      சரணம்                  
                 
                  காலகாலனும் பிரமனும் பணியும்
                  மாலோலன் நரசிம்மனும் நீயே
                  சாலச்சிறந்த அயோத்தியில் குடிகொண்ட
                  பாலராமனே  ஜானகி லோலனே



Friday, 16 January 2026

நமச்சிவாயயென…..

 



                        நமச்சிவாயயென…..


                                     பல்லவி


         நமச்சிவாயயென நாவாரத்துதித்தேன் - ஓம்


                             துரிதம்

         அமரரும் முனிவரும் கணங்களும் நந்தியும்

         அமரேந்திரனும் வணங்கிடும் சிவனை


                        அனுபல்லவி


       சமமென தனக்கருவரில்லாத ஈசனை

       ஆமருவியப்பனெனும் கேசவன் நேசனை


                             சரணம்


       இமவான் மகளை மணந்தவனை பசுபதியை

       உமா மகேச்வரனை சொக்கநாதனை

       சோமசுந்தரனை ஆலவாயழகனை

       சாம முதல் வேதங்கள் போற்றும் சங்கரனை


       காமனையெரித்தவனை கங்காதரனை

       மமதையில் திளைத்த திரிபுரனை வதைத்தவனை

       குமரனைப் படைத்தவனை நெற்றிக்கண்ணனை

       எமனைக் காலாலுதைத்த காலகாலனை 



                             

           

          

       

       


       

        

       

       

Wednesday, 14 January 2026

மீண்டுமாதி கேசவனை….

 


                        மீண்டுமாதி கேசவனை….

                                     பல்லவி

               மீண்டுமாதி கேசவனைப் போற்றித்துதித்தேன்

               ஆண்டவன் அவனே என்றுணர்ந்து நான்

                                    அனுபல்லவி

                பாண்டவர் நேயனை பக்த சகாயனை

                தீண்டும் அரவின் மேல் பள்ளி கொண்ட மாதவனை

                                        சரணம்

                காண்டவ வனமெரித்த நர நாராயணனை

                வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் கண்ணனை

                ஆண்டாள் நேசனை அரங்கநாதனை

                மாண்டபின் இனி பிறந்திடாதிருந்திட

      

                 

 

அக்காரக்கனியை…..

 


                          அக்காரக்கனியை…..

                

                                பல்லவி

              அக்காரக்கனியை நரசிம்மனைத்துதித்தேன்

              எக்காலத்திலுமெனைக் காக்கும் கேசவனை

                              அனுபல்லவி

              செக்கச்சிவந்த கண்ணுடைய செங்கண்ணனை

              சக்கரக்கையனை சர்வலோகநாயகனை

                                  சரணம்

              உக்கிர மூர்த்தியே ஆனாலுமவன்

              பக்தருக்கருளும் பரமதயாளன்

             திக்கெட்டும் புகழ் விளங்கும் திருமால் கோவிந்தன்

             மக்கள் கொண்டாடும் மாலோலன் நாராயணன்



              

             

              

Monday, 12 January 2026

உன் பாதமே……

 


ஶ்ரீமஹாராஞ்ஞி ஸ்தவம் :

சராசரஜக³த்ஸ்ருʼஷ்டிஸ்தி²திஸம்ஹ்ருʼதிகாரிணி ।

நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் 

" அசையும் அசையாப் பொருட்கள் நிரம்பிய ப்ரபஞ்சத்தை உண்டாக்கி, காத்து அழிக்கும் பராசக்தியும், மஹாராஞ்ஞியுமான தாயே!! நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"

ப்³ரஹ்மவிஷ்ணுமஹேஶாநவந்தி³தே கி³ரிநந்தி³நி ।

நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் ॥ 

"ப்ரஹ்மா விஷ்ணு மஹேச்வரர்களால் ஸதா வந்திக்கப்பட்டவளும், மலையரசனின் மகளுமான ஶ்ரீபார்வதி தேவியே!! ஶ்ரீமஹாராஞ்ஞியே!! தாயே!! உனக்கு நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"



                             உன் பாதமே……

                                     பல்லவி

                    உன் பாதமே சரணடைந்தேன் உமா தேவி

                    என்னைக் காத்தருள வேண்டுமென வேண்டி

                                    அனுபல்லவி

                  சென்ன கேசவன் சோதரியே பார்வதியே

                  அன்னபூரணியே மலையரசன் மகளே

                                       சரணம்

                   சுராசுரரும் சுகசனகாதியரும்

                   அரனயனரியும்  பணி திரிபுரசுந்தரியே

                   சராசரமனைத்தும் படைத்து காத்தழிக்கும்

                   பராபரையே பரமேச்வரியே

                   

                    

                  






                     

               

வினைப்பயனால்…..

 


  வினைப்பயனால்…..


                     பல்லவி


வினைப்பயனால் கட்டுண்ட என் மனத்துள்

உனையறியும் ஆவல் கொண்டேன் 

கேசவனே


                   அனுபல்லவி


 சுனை நீராய்க் கருணை வெள்ளம்    

     சுரக்கும்

 இனியவனே  ஶ்ரீமன் நாராயணனே


                        சரணம்


 நினைக்கும் காணும் நீரும் மரமும்

 அனைத்தும் மாயையென உரைக்கக் 

     கேட்டேன்

 தனையறிந்தால் தன்னுளே 

      எனையறிந்தால்

 உனையறியலாம் என்றுணர்ந்தேன்

   பரம்பொருளே

ஏனிந்த சோதனையை…😭😭

 ஏனிந்த சோதனையை…😭😭


                        பல்லவி


  ஏனிந்த சோதனையை எனக்களித்தாய்

  தேனே கேசவனே திகட்டாத தெள்ளமுதே


                      அனுபல்லவி


வானவரும் தானவரும் சுகசனகாதியரும்

ஏனையோனைவரும் வணங்கும் பரம்பொருளே


                          சரணம்


தேனுகாசுரனை வதைத்தவன் சோதரனே

பானுவைத்திங்களை கண்களாயுடையவனே

ஊனுயிரனைத்தும் நீயென்றே நினைத்தேன்

போனெனும் கைபேசி தனை இழக்கச்செய்து

இம்மாநிலம் கொண்டாடும்…




    இம்மாநிலம் கொண்டாடும்…


                    பல்லவி


இம்மாநிலம் கொண்டாடும் ஶ்ரீலிதாம்பிகையே

சும்மாயிருக்கும் போதும் அம்மா உனைத் துதித்தேன்

                    அனுபல்லவி


பெம்மான் சிவனிடம் கொண்ட பரமேச்வரியே

அம்மான் கேசவன் அன்பு சோதரியே


                       சரணம்


சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தாயே மீனாக்ஷி

இம்மாயத்தரணியை ஆள்பவள் நீயே

எம்மாத்திரம் உனக்கு ஏழையேனெனக்கருள

வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை

 

தேவி உனை……

 தேவி உனை……


                            பல்லவி


                                      தேவி உனைப் பணிந்தேன் நீயே எனக்கருள்வாய்

                                      மூவாசைப் பிணி போக்கும் முன் வினைப் பயன் நீக்கும்


                        அனுபல்வி

      

                                      தேவன் சிவபெருமானிடம் கொண்ட நாயகியே

                                      பூவுலகோர் போற்றும் கேசவன் சோதரியே

                                                             

                        சரணங்கள் 

                  

                                      ஆவலுடனடியார்க்கு  அருளளிப்பவளே 

                                      மாவிடை வானன் நேசிக்கும் பத்தினியே

                                      மேவிடும் அன்புடன் பக்தரைக் காப்பவளே

                                      காவலாய் நின்றவர் கவலைகளைத் தீர்ப்பவளே


                                      தேவி அன்னபூரணி பூரணமானவளே

                                      பூவையே மலைமகளே பரமசிவன் துணைவியே

                                      தேவரும் நான்முகனும் வணங்கிடும் ஈச்வரியே

                                      பாவையே  பருவங்களில் துதிக்கப் படுபவளே


                                      சிவராத்திரி நவராத்திரி மோகராத்திரி என்றும்

                                      புவனமே அழிந்திடும் காலராத்திரியுமான

                                      சிவசக்தியே உமையே பிரணவப்பொருளே

                                      சிவனை உபசரிக்கும் உமாமகேச்வரியே

                                     

                                      அவனியை படைத்தவளே காப்பவளே அழிப்பவளே

                                      தவம் புரியும் முனிவர்களால் துதிக்கப்படுபவளே

                                      கவனமுடன் போற்றி வணங்கிடுமடியார்க்கு

                                      உவந்து மங்களமும் முக்தியுமளிப்பவளே

                                      

                                      தேவர்கள் படுந்துயரை போக்கியருள்பவளே

                                      தேவர் குலம் காத்து அவரிடர் களைபவளே

                                      தேவர்களுக்குதவிடும் திரிபுரசுந்தரியே

                                      தேவர் முனிவர் பணி பதகமலமுடையவளே

       

                                      புவனேச்வரியே முக்கண்ணுடையவளே

                                      சுவர்ணமயமானவளே போகம் மோக்ஷம் தருபவளே

                                      குவலயம் போற்றும் மகாமாயே

                                      புவனம் கொண்டாடும் அகிலாண்டேச்வரியே

                                      

                                      சரணடைந்தோர் நலன் காக்கும் சர்வேச்வரியே

                                      அல்லலிடர் களையும் பராசக்தியே

                                      அனைத்து வகை செல்வங்களும் அள்ளி அளிப்பவளே

                                       மூவருக்கும் முதலான மூலப்பொருளே


            “ஸ்ரீ தேவி அஷ்டகம்”


அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங் களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் தழுவி எழுதியது. ஸ்ரீஆதிசங் கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துதியை, 'தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர். 

குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத் தில் தினமும் இந்த துதிப் பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடு வதால் சகல நன்மைகளும் கைகூடும்.