Sunday, 16 April 2023

எண்கர நாயகியை…..

                                 


                              எண்கர நாயகியை…..


                                         பல்லவி

                       எண்கர நாயகியை பத்ரகாளியை

                      கண்கவரழகியை மனமாரத்துதித்தேன்

                                       அனுபல்லவி

                      தண்மதி பிறையணிந்த கேசவன் சோதரியை

                      மண்மகளும் கலைமகளும் போற்றுமீச்வரியை

                                         சரணம்

                     விண்ணாளுமிந்திரனும் மண்ணாளும் மன்னர்களும்

                     எண்ணிலா முனிவர்களும் கரம் பணிந்தேத்தும்

                     பெண்ணணங்கை பேருருவை திரிபுரசுந்தரியை

                     பண்ணிசைத்துப் பாடி பரவசமடைந்து


#திருத்துறையூர்

#பத்திரகாளியம்மன்


திருத்துறையூர் (எ) திருத்தரூர் (எ) #திருத்தளூர் என்னும் பாடல் பெற்ற தலத்தின் #சிஷ்டகுருநாதர் ஆலயத்தின் எதிரில் பத்திரகாளியம்மன் ஆலயம் தனிக்கோவிலாக உள்ளது. பெயர்ப்பலகை கண்டு உள்ளே சென்று பார்க்க அழகிய எண்கர நாயகியாய் அன்னை. நிசும்பசூதனி ... 

சற்றே அருகில் சென்று பார்க்க மிகவும் பரிச்சயமான முகம். ஜென்ம ஜென்மங்களாய் அன்னையாக இருக்கும் அவள். இதோ நான் கொண்ட மனித பிறப்பிற்காக மனித உருவில். கைகள் அனைத்திலும் ஆயுதங்கள். தூக்கி செருகிய கண்டாங்கி சேலை. ஆனால் அவள் கண்கள் பேசுகின்றன. 

ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் #விழிமொழி தெரியும். 

ஏதோ ஒரு சபைவிழாவில் மகனைப்பற்றி சொந்தக்காரர்கள் அங்கலாய்க்கையில் புன்சிரிப்போடே மென்று விழுங்கும் கண்கள்

யாரோ முகம்தெரியாத நபர் மகனை பாராட்டிப் பேசுகையில் எட்டி பார்க்கும் நீர்த்துளிகளில் பெருமிதம் கொள்ளும் கண்கள்

எவ்வளவு வயதானாலும் கூட்டத்தில் மகனின் தலை மறைந்த அடுத்த கணம் பரபரத்து தேடும் கண்கள்

நாலு பேர் நடுவில் இருந்தாலும் பார்த்த உடனேயே சாப்பிடுகிறாயா எனக் கேட்கும் வாஞ்சை விழிகள்

தவறு செய்ததை தெரியவரும் போது நீயாக ஒத்துக்கொண்டு தஞ்சமடைகிறாயா அல்லது நானே தண்டிக்கவா என்னும் மிரட்டல் பார்வை

நிச்சயமாக ஒவ்வொரு மகன்/மகளுக்கு மட்டுமே புரியும் அவர்கள் தாய் பேசும் ஆயிரம் விழிமொழிகள்...

இவள் எனது அன்னையே ... எந்த காலம் யாரால் செய்யப்பட்டது ... யாதொரு ஆராய்ச்சியும் செய்ய முற்படவில்லை. என் அன்னை எனக்கானவள் ...கொஞ்ச நேரம் பரஸ்பர பேச்சுகள் பின்னர் கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன் ... வெள்ளிக்கிழமை ராகுகாலம் நல்ல நேரத்தில் வந்திருக்கீங்க பூசாரி யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் ... சிறு குழந்தை கையசைத்து காட்டுவது போல அவளுக்கு நான் கை காட்டி விடைபெற்றேன். விரைவில் மீண்டும் சந்திக்க வேண்டும்.


                                       

No comments:

Post a Comment