ராம்
#தினமும் #ஶ்ரீராமனைத் #துதிப்போம்#8
#பஞ்சவடி #சீதாராமன் 1
பல்லவி
கருநீலவண்ணனை சீதாராமனை
பஞ்சவடித்தலத்தில் கண்டு பணிந்தேன்
அனுபல்லவி
பெருமைக்குரிய கோதாவரிக்கரையில்
பெருங்கருணையுடன் பக்தருக்குக்காட்சிதரும்
சரணம்
அருந்தவம் புரிந்திடும் முனிவரும் தேவரும்
கருடனும் அனுமனும் அகலிகையும் சபரியும்
குருநாரதருடன் அடியவன் கேசவனும்
அருள் பெற வேண்டியே அனுதினம் துதித்திடும்
#பஞ்சவடி #சீதாராமன் 2
பல்லவி
சீதா லஷ்மணனுடனுறை ராமனை
கோதாவரிக்கரையில் மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சாதாரணரும் மேதாவிகளும்
நீதான் கதியெனத் தஞ்சமடைந்திடும்
சரணம்
தந்தைசொல்மிக்க மந்திரமில்லையெனும்
தத்துவம் சொன்ன கேசவனை மாதவனை
சிந்தையில் வைத்து சீரடி போற்றி
முந்தைய பழவினைப் பயனனைத்தும்தொலைந்திட
“பஞ்சவடி ராமன்”
ராமன் என்றதும் நம் நினைவில் வருவது அயோத்தியும், பஞ்சவடியும், தண்டகாரண்யமும், இலங்கையும்தான். இதில் பஞ்சவடியில்தான் வனவாசத்தின்போது ராமன் சீதையுடனும், இளவலுடனும் சந்தோஷமாக இருந்தார். இவ்விடமே சூர்ப்பனகை மூக்கறுபட்டு, ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற இடம்.
மகாராஷ்டிராவில் நாசிக்கில் அமைந்துள்ள பஞ்சவடியையும், கோதாவரி நதியையும் தரிசிப்பவர்க்குப் பல மடங்கு புண்ணியம் வரும் என்பது புராணக் கூற்று. ராமபிரான் வனவாசம் சென்றபோது, அகத்திய முனிவரைத் தரிசித்து ஆசி பெற்றது இந்த கோதாவரி நதிக்கரையில்தான். ராமன், சீதை, லட்சுமணரை ஆசீர்வதித்து சில அஸ்திரங்களைக் கொடுத்த அகத்தியர், ஐந்து ஆல மரங்கள் சூழ்ந்துள்ள, பஞ்சவடியில் வசிக்குமாறு அருளினார்.
பஞ்சவடி என்ற அந்த புண்ணிய பூமியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பஞ்சவடி தீரம் எனும் கோதாவரி நதிக்கரையில்தான் ராமனும், சீதையும் நீராடுவார்களாம். அப்புனித 'ராம்குண்ட்' என்ற இடத்தில் கரைக்கப்படும் அஸ்தி உடனே மறைந்துவிடும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. இதில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்கள் செய்வதால் பல தலைமுறைகள் புண்ணியம் பெறும் எனக் கூறப்படுகிறது. அதனால் அமாவாசை, பெளர்ணமி, கிரகண நாட்களில் இங்கு ஏராளமான மக்கள் வந்து முன்னோர் காரியங்களைச் செய்கின்றனர். இதனை அடுத்து லட்சுமணன் நீராடிய 'லட்சுமண் குண்ட்' உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 'திவி ஆஞ்சநேயர்' பிரம்மாண்ட உயரத்தில் ஒரே தூணில் இருபக்கமும் வேறுபட்ட அனுமன் உருவங்களைத் தாங்கி, பார்ப்பதற்கு மிக அழகாகவும், வித்தியாசமாகவும் காட்சி தருகின்றனர், கரையில் அமைந்துள்ள சிவ, விஷ்ணு ஆலயங்கள், 1700களில் மராட்டியத்தை ஆண்ட பேஷ்வா மன்னர்களால் கட்டப்பட்டது. இவற்றுள் நாரோசங்கர் ஆலயமும், சுந்தர நாராயண் ஆலயமும் மிகக் கலையழகுடன், அற்புதமாக உள்ளன. ராம்குண்ட் தீர்த்தத்தில்தான் காந்தியடிகளின் அஸ்தி, நேருஜி அவ்ர்களால் கரைக்கப்பட்டது. சீதையும், ராமனும் இன்பமாக வாழ்ந்த 'சீதாகுஃபா' என்ற குகையும் இங்கு பிரசித்தி.
ஐந்து ஆலமரங்களுக்கிடையே (வட விருட்சம்) சீதா குகை அமைந்துள்ளது. குகை மிகவும் குறுகலாக உள்ளது. தவழ்ந்தபடியே உள் நுழைந்து அமர்ந்த வாக்கிலேயே சில படிகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். ராமனும், லட்சுமணனும் காய்கனிகள் கொண்டு வரச் செல்லும்போதும். அரக்கர்களுடன் போரிடும்போதும் சீதை பாதுகாப்பாக இக்குகையில்தான் இருப்பாளாம். உள்ளே அவர்கள் பூஜித்த சிவலிங்கமும், சீதை, ராம, லட்சுமணர்களின் சிலைகளும் உள்ளன. இக்குகைக்கு மேலும், பக்கங்களிலும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டாலும், குகை ராமாயண காலத்திலிருந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் எதிரிலுள்ள பர்ணசாலை இருந்த இடத்திலிருந்துதான் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றானாம். அதைக் குறிக்கும் விதமாக அங்கு மாரீச வதமும், சீதாஹரன் நிகழ்ச்சியையும் பொம்மை வடிவில் அமைத்துள்ளனர்.
இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள 'தபோவன்' என்ற இடமே, அன்று பல முனிவர்களும், ரிஷிகளும் தங்கி யாகம் செய்த இடமாம். பெயருக்கேற்ப இன்றும் அமைதியாகக் காணப்படும் இவ்விடத்தில்தான் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கைத் துண்டித்தாராம். இதனாலேயே இவ்வூருக்கு 'நாஸிக்' ('நாஸிகா' என்றால் சமஸ்கிருதத்தில் மூக்கு) என்ற பெயர் ஏற்பட்டதாம். ராமன், சீதையின் தனிமைக்கு இடையூறில்லாமல் லட்சுமணன், பெரும்பாலான நேரம் இவ்விடத்திலேயே இருப்பாரென்பதால் இங்கு லட்சுமணனுக்கு ஓர் ஆலயம் உள்ளது.
பஞ்சவடியின் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத்திறனும் கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 1794ம் ஆண்டு கோபிகாபாய் பேஷ்வாவினால் கட்டப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம் ரூபாய் செலவானதாம்.
கர்ப்பக் கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம்மிக விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது!
இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும் சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும், தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதி. இவ்வாலயத்தில் ராமநவமி மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அருகிலுள்ள ஜோதிர் லிங்கத்தலமான த்ரியம்பகேசுவரர், கோதாவரியின் உற்பத்தி இடமான பிரம்மகிரி, ஹனுமன் பிறந்த இடமான அஞ்சனேரி, சப்தச்ருங்கி மாதா கோயில் கொண்டுள்ள வணி என்று இங்கு தரிசிக்க ஏகப்பட்ட புண்ணியத் தலங்கள் உள்ளன.
மும்பையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நாசிக்கிற்கு நிறைய ரயில், பஸ் வசதிகள் உண்டு. நம் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசித்து புண்ணியம் பெற வேண்டிய தலம் இது.