Friday, 16 January 2026

நமச்சிவாயயென…..

 



                        நமச்சிவாயயென…..


                                     பல்லவி


         நமச்சிவாயயென நாவாரத்துதித்தேன் - ஓம்


                             துரிதம்

         அமரரும் முனிவரும் கணங்களும் நந்தியும்

         அமரேந்திரனும் வணங்கிடும் சிவனை


                        அனுபல்லவி


       சமமென தனக்கருவரில்லாத ஈசனை

       ஆமருவியப்பனெனும் கேசவன் நேசனை


                             சரணம்


       இமவான் மகளை மணந்தவனை பசுபதியை

       உமா மகேச்வரனை சொக்கநாதனை

       சோமசுந்தரனை ஆலவாயழகனை

       சாம முதல் வேதங்கள் போற்றும் சங்கரனை


       காமனையெரித்தவனை கங்காதரனை

       மமதையில் திளைத்த திரிபுரனை வதைத்தவனை

       குமரனைப் படைத்தவனை நெற்றிக்கண்ணனை

       எமனைக் காலாலுதைத்த காலகாலனை 



                             

           

          

       

       


       

        

       

       

Wednesday, 14 January 2026

மீண்டுமாதி கேசவனை….

 


                        மீண்டுமாதி கேசவனை….

                                     பல்லவி

               மீண்டுமாதி கேசவனைப் போற்றித்துதித்தேன்

               ஆண்டவன் அவனே என்றுணர்ந்து நான்

                                    அனுபல்லவி

                பாண்டவர் நேயனை பக்த சகாயனை

                தீண்டும் அரவின் மேல் பள்ளி கொண்ட மாதவனை

                                        சரணம்

                காண்டவ வனமெரித்த நர நாராயணனை

                வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் கண்ணனை

                ஆண்டாள் நேசனை அரங்கநாதனை

                மாண்டபின் இனி பிறந்திடாதிருந்திட

      

                 

 

அக்காரக்கனியை…..

 


                          அக்காரக்கனியை…..

                

                                பல்லவி

              அக்காரக்கனியை நரசிம்மனைத்துதித்தேன்

              எக்காலத்திலுமெனைக் காக்கும் கேசவனை

                              அனுபல்லவி

              செக்கச்சிவந்த கண்ணுடைய செங்கண்ணனை

              சக்கரக்கையனை சர்வலோகநாயகனை

                                  சரணம்

              உக்கிர மூர்த்தியே ஆனாலுமவன்

              பக்தருக்கருளும் பரமதயாளன்

             திக்கெட்டும் புகழ் விளங்கும் திருமால் கோவிந்தன்

             மக்கள் கொண்டாடும் மாலோலன் நாராயணன்



              

             

              

Monday, 12 January 2026

உன் பாதமே……

 


ஶ்ரீமஹாராஞ்ஞி ஸ்தவம் :

சராசரஜக³த்ஸ்ருʼஷ்டிஸ்தி²திஸம்ஹ்ருʼதிகாரிணி ।

நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் 

" அசையும் அசையாப் பொருட்கள் நிரம்பிய ப்ரபஞ்சத்தை உண்டாக்கி, காத்து அழிக்கும் பராசக்தியும், மஹாராஞ்ஞியுமான தாயே!! நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"

ப்³ரஹ்மவிஷ்ணுமஹேஶாநவந்தி³தே கி³ரிநந்தி³நி ।

நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் ॥ 

"ப்ரஹ்மா விஷ்ணு மஹேச்வரர்களால் ஸதா வந்திக்கப்பட்டவளும், மலையரசனின் மகளுமான ஶ்ரீபார்வதி தேவியே!! ஶ்ரீமஹாராஞ்ஞியே!! தாயே!! உனக்கு நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"



                             உன் பாதமே……

                                     பல்லவி

                    உன் பாதமே சரணடைந்தேன் உமா தேவி

                    என்னைக் காத்தருள வேண்டுமென வேண்டி

                                    அனுபல்லவி

                  சென்ன கேசவன் சோதரியே பார்வதியே

                  அன்னபூரணியே மலையரசன் மகளே

                                       சரணம்

                   சுராசுரரும் சுகசனகாதியரும்

                   அரனயனரியும்  பணி திரிபுரசுந்தரியே

                   சராசரமனைத்தும் படைத்து காத்தழிக்கும்

                   பராபரையே பரமேச்வரியே

                   

                    

                  






                     

               

வினைப்பயனால்…..

 


  வினைப்பயனால்…..


                     பல்லவி


வினைப்பயனால் கட்டுண்ட என் மனத்துள்

உனையறியும் ஆவல் கொண்டேன் 

கேசவனே


                   அனுபல்லவி


 சுனை நீராய்க் கருணை வெள்ளம்    

     சுரக்கும்

 இனியவனே  ஶ்ரீமன் நாராயணனே


                        சரணம்


 நினைக்கும் காணும் நீரும் மரமும்

 அனைத்தும் மாயையென உரைக்கக் 

     கேட்டேன்

 தனையறிந்தால் தன்னுளே 

      எனையறிந்தால்

 உனையறியலாம் என்றுணர்ந்தேன்

   பரம்பொருளே

ஏனிந்த சோதனையை…😭😭

 ஏனிந்த சோதனையை…😭😭


                        பல்லவி


  ஏனிந்த சோதனையை எனக்களித்தாய்

  தேனே கேசவனே திகட்டாத தெள்ளமுதே


                      அனுபல்லவி


வானவரும் தானவரும் சுகசனகாதியரும்

ஏனையோனைவரும் வணங்கும் பரம்பொருளே


                          சரணம்


தேனுகாசுரனை வதைத்தவன் சோதரனே

பானுவைத்திங்களை கண்களாயுடையவனே

ஊனுயிரனைத்தும் நீயென்றே நினைத்தேன்

போனெனும் கைபேசி தனை இழக்கச்செய்து

இம்மாநிலம் கொண்டாடும்…




    இம்மாநிலம் கொண்டாடும்…


                    பல்லவி


இம்மாநிலம் கொண்டாடும் ஶ்ரீலிதாம்பிகையே

சும்மாயிருக்கும் போதும் அம்மா உனைத் துதித்தேன்

                    அனுபல்லவி


பெம்மான் சிவனிடம் கொண்ட பரமேச்வரியே

அம்மான் கேசவன் அன்பு சோதரியே


                       சரணம்


சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தாயே மீனாக்ஷி

இம்மாயத்தரணியை ஆள்பவள் நீயே

எம்மாத்திரம் உனக்கு ஏழையேனெனக்கருள

வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை