காத்தருள்வாயெனையே……
பல்லவி
காத்தருள்வாயெனையே பட்டபிராமா
பூத்த கமலமலர் போலழகுடையவனே
அனுபல்லவி
ஏத்தமிகு எழிலுடைய ஶ்ரீராமச்சந்திரனே
நாத்தங்கு புன்மொழியை ஏற்ற கேசவனே
சரணம்
நீலவண்ண மேனியனே நிர்மல முகத்தோனே
ஞாலமுய்யவென அவதாரம் எடுத்தவனே
பாலராமனாய்ப்பல அரக்கர்களையழித்தவனே
ஏலவார் குழலி ஜானகி மணாளனே
கமலநயனனே சியாமள நிறத்தோனே
கமல மலர் பதமுடைய கமலநாபனே
கமலவனம் போல் காட்சியளித்திடும்
கோமள வடிவான கோதண்டராமனே
தசகண்டனை வென்ற தசரதராமனே
குசலவர் தந்தையே தினகரகுலத்தோனே
கோசலைப் புதல்வனே குகசோதரனே
மாசிலா மணியே மலர்ப்பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment