கண்ணனே.....
பல்லவி
கண்ணனே என் தோழன் என்றும்
திண்ணமுற என்னருகில் இருந்து எனைக்காக்கும்
அனுபல்லவி
எண்ணமெல்லாமவனே எப்போதும் நிலைத்திருப்பான்
கண்ணசைவில் மனமறிந்து என் குறைகள் தீர்த்திடுவான்
சரணம்
மண்ணையுண்ட வாயன் மாமாயன் கேசவன்
கண்ணைக்காட்டி மிரட்டிய அன்னைக்கு
அண்ட சராசரங்களை வாயில் காட்டியவன்
தண்மதி முகத்தோன் தாமரை நாபன்
வெண்ணை பால் தயிர் திருடியே உண்பான்
பெண்டிர் கோபியர் கடிந்துரைக்க வந்தால்
வேடிக்கையாய் பல குறும்புகள் செய்திடுவான்
விண்ணவரும் வியக்கும் லீலைகள் புரிந்திடுவான்
பண்ணிசைத்துக் குழலூதி கறவைகள் மேய்த்திடுவான்
வண்ண ஜாலங்கள் காட்டி மாயங்கள் செய்திடுவான்
எண்ணித் துதிப்பவர்க்கு அருள்மழை பொழிவான்
புண்ணியம் செய்தவர்க்கு கண்ணெதிரில் தெரிவான்
No comments:
Post a Comment