Friday, 27 March 2020

“கோவிந்தன்”







 “கோவிந்தன்”



இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4
இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

                பார்த்த சாரதி
      
                         பல்லவி

             மழை தடுத்த மாதவனை மதுசூதனனை 
             அழகன் கேசவனை உளமாரத்துதித்தேன் 

                         அனுபல்லவி 

             குழலூதும் மாயனை உலகுண்டுமிழ்ந்தானை
             பிழை புரிந்த இந்திரன் செருக்கழித்த யாதவனை

                             சரணம்

               மலையைக் குடையாக மலர்க்கரத்திலேந்தி
               நிழல் தந்து ஆயர்கள் குலம் காத்த உத்தமனை
               அழைத்துக்கதறிய கரிக்கபயம் அளித்தவனை
                அல்லிக்கேணி வளர் பார்த்த சாரதியை

                அழலேந்தும் நெற்றிக்கண்ணனும் பணியும்
                குழலோனை ஆயர்குல கோவிந்தனை
                நிழலென உடனிருக்கும் ராதையின் கண்ணனை
                கழலடி தொழுது எனக்கருள வேண்டுமென

No comments:

Post a Comment