பாதுகை.......
பல்லவி
பாதுகை பெரிதோ உன் பாதங்கள் பெரிதோ
யாதென்று எனக்குரைப்பாய் ஓ ரகு ராமா
அனுபல்லவி
வேதங்களறிந்த வேதாந்த தேசிகரும்
தீதொன்றுமில்லாத பரதனும் போற்றும்
சரணம்
சீதையை மணமுடித்த சீதா ராமனே உன்
பாதுகைக்கு பரதன் முடிசூட்டினான்
ஆதலினாலுன் பாதங்களைவிடவும்
பாதுகையே சிறந்ததெனக் கொள்ளலாமோ
பாதகம் புரிந்த அரக்கரையழித்தவனே
மாதொருபாகன் போற்றும் ராகவனே
சாதனைகள் பல புரிந்த கோசலராமனே
கோதண்டராமனே நீயுரைத்திடுவாய்
மாதவனே கேசவனே மதுசூதனனே அந்த
பாதுகைகளுன் பாதம் தாங்கியதாலன்றோ
பூதலம் போற்றுமந்த சிம்மாசனத்தில்
ஏதமின்றி அமர்ந்து ஆட்சி செய்தது
No comments:
Post a Comment