கண்ணபிரான்
பல்லவி
வெண்ணை விழுங்கிய மாயனைக் கேசவனை
கண்ணபிரானை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
மண்ணையுண்ட வாயனை மதுசூதனனை
தண்மதி முகத்தானைத் தாமரை நாபனை
சரணம்
கண்ணசைவில் கோபியர்கள் உள்ளம்கவர் கள்வனை
பண்ணிசைத்து குழலூதி மனம் கொள்ளை கொள்பவனை
அண்டசராசரங்களனைத்தையும் காப்பவனை
புண்ணியம் செய்தோர்கள் கண்ணெதிரில் காண்பவனை
*********
வெண்ணைய்விழுங்கி வெருங்கலத்தை
வெற்பிடைஇட்டதன் அதனோசை கேட்கும்
கண்ணபிரான் கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம், உன்மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும்தீமை
புரைபுரையால் இவைசெய்யவல்ல
அண்ணல் கண்ணன் ஒர்மகனைப் பெற்ற
அசோதைநங்காய்! உன்மகனைக் கூவாய்.
பெரியாழ்வார் திருமொழி
அம்மா ! யசோதைப்பிராட்டியே! உன் மகன் கண்ணன் எங்கள் வீட்டில் நுழைந்து வெண்ணைய் முழுவதையும் உண்டு பின் காலிப்பாத்திரத்தைக் கல்லிலே போட்டு அதுடையும் போதுண்டாகும் ஓசையைக்கேட்டு மகிழ்கின்றான். இந்தக் கண்ணன் படித்துள்ள திருட்டுக்குரிய வித்தையை எங்களால் தடுக்கமுடியாது. ஆகையால் உன்னுடைய பிள்ளையை தீம்பு செய்யாமல் தடுப்பாயாக. புண்ணிலே புளிச்சாற்றை சொரிந்ததுபோல் கொடுமையான தீம்புகளை ஒவ்வொரு வீட்டிலும் சாமர்த்தியமாகச் செய்கின்றான். யசோதைப் பிராட்டியே! உனதுமகனை அழைத்துக் கொள்வாயாக ! என்று கோபிகை கூறுகின்றாள்.