Thursday, 27 November 2025

பார் போற்றும் …….

 



                    பார் போற்றும் …….


                                           பல்லவி 


                     பார் போற்றும் பார்த்தசாரதியைக் கேசவனை

                     தேரோட்டியின் புகழைப் பாடித் துதித்தேன்

                                         அனுபல்லவி

                     கார்வண்ணமேனியனைக் கடல் வண்ணக்கண்ணனை

                     நீர்மலைமேல் நின்றருளும் நீர்வண்ணப்பெருமாளை

                                            சரணம்

                     ஆர்பரித்தெழந்த கௌரவப்படை வீழும் வண்ணம்

                     தேர் நடத்திப் பார்த்தனுக்கு துணை நின்ற சாரதியை

                     ஊர் புகழுமுத்தமனை உலகளந்த பெருமாளை 

                     கீர்த்திமிகு ஶ்ரீமன் நாராயணனைத் திருமாலை

                      

                     

                       

                        


                        



Tuesday, 18 November 2025

நாராயணாவென்றழைத்த……

 


                             நாராயணாவென்றழைத்த……

                                              பல்லவி

                        நாராயணாவென்றழைத்த அஜாமிளனுக்கு

                        பேராதரவளித்த கேசவப்பெருமாளே

                                            அனுபல்லவி      

                        ஓராயிரம் நாமமோதியழைத்துமெனை        

                        பாராமலிருப்பதும் முறையாமோ சொல்

                                              சரணம்

                        ஆராவமுதனே சாரங்கபாணியே

                        காரார் குழலாள் கோமளவல்லி நாதனே

                        தீராவினை தீர்க்கும் திருவரங்கத்தம்மானே

                        பாரோர் போற்றும் திருவேங்கடமுடையோனே

                        

                          


Friday, 14 November 2025

வணங்கினேன்…..

 


                    வணங்கினேன்…..

                                பல்லவி

         வணங்கினேன் கணபதீச்சரத்தானை ஈசனை

         தணலேந்தும் நெற்றிக்கண்ணனை சிவனை

                            அனுபல்லவி

         கணங்களும் நந்தியும் நரர் சுரர் நான்முகனும்

         கணபதியும் பணிந்திடும் கறைகொண்ட கண்டத்தானை

                                சரணம்

         மணம் கமழும் சோலைகள் சூழ் திருச்செங்காட்டன்குடியில்

         இணக்கமுடனருகிருக்கும் குழலம்மை நாதனை

         உத்திராபதீச்வரனை கேசவன் நேசனை

         இணையடி நிழலே சதமெனத் துதித்து




நறைகொண்ட மலர்தூவி 

  விரையளிப்ப நாடோறும்

முறைகொண்டு நின்றடியார் 

  முட்டாமே பணிசெய்யச்

சிறைகொண்ட வண்டறையுஞ் 

  செங்காட்டங் குடியதனுள்

கறைகொண்ட கண்டத்தான் 

  கணபதீச் சரத்தானே. 


🌺"நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்

முறைகொண்டு நின்று அடியார் முட்டாமே பணிசெய்யச்

சிறைகொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்

கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே."🌺


——(திருஞானசம்பந்தர் தேவாரம் : 01.061.01)



பொருளுரை : அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.



திருச்செங்காட்டங்குடி : கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி(ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப்பெயர் பெற்றது.



என்னில் அவனுமுண்டு….

 


                            என்னில் அவனுமுண்டு….


                                             பல்லவி

                   என்னில் அவனுமுண்டு அவனுள் நானுமுண்டு

                   தன்னுள் அவனைக்கண்டு தணிந்த தென் நெஞ்சம்

                                            அனுபல்லவி 

                   முன்னின்று துதித்தேனந்தக் கேசவனை நானும்

                   என்னுளவன் இருப்பதறியா நாட்களிலே

                                             சரணம்

                 மன்னுபுகழ் கோசலையின் மணிவயிற்றிலுதித்தவன்

                 தென்னிலங்கையரக்கன் தலை சிந்துவித்ததவனே

                 கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து கருமணி

                 இன்னும் பல புகழுடைய இன்னமுதவனே தான்

                                               *****

Friday, 26 September 2025

மங்களாம்பிகையே…..

 


                            மங்களாம்பிகையே…..


                                                பல்லவி

         மங்களாம்பிகையே மகிஷாசுரமர்த்தினி

         திங்கள் பிறையணிந்த உனையே துதித்தேன்

                      அனுபல்லவி

         சங்கரன் அகச்தீச்வரனுடனுறை ஈச்வரி

         சங்கரி சென்ன கேசவன் சோதரி

                         சரணம்

         பங்கஜவல்லி பரமக்ருபாகரி

         குங்குமக்காரி குமாரஜனனி

         சிங்காரி ஒய்யாரி சிவகாமசுந்தரி

         நங்கையர் போற்றும் ராஜராஜேச்வரி        

         

         அங்காளப்பரமேச்வரி அகிலலோகநாயகி

         அங்கயற்கண்ணி அகிலாண்டேச்வரி

         பொங்கரவணிந்த உமாமகேச்வரி

         சங்கராபரண ராகப்ரியே கௌரி


          மங்களம் தரும் மதுரை மீனாக்ஷி 

          கங்கையைத்தாங்கும் காசி விசாலாக்ஷி

          சிங்கவாகனி காஞ்சி காமாக்ஷி 

          எங்கும் நிறைந்திருக்கும் ஏகாம்ப்ரேச்வரி

          


          





          

                         


  

         

         

         

          

 

          


         

           


Wednesday, 17 September 2025

சங்காழ்வார்

 



                                   சங்காழ்வார்


                                        பல்லவி

                        சங்காழ்வார் வாழி பாஞ்சஜன்யம் வாழி

                        பொங்கரவணை துயிலும் திருமாலின் கரத்திலங்கும்

                                        அனுபல்லவி

                        மங்காத புகழ் மேவும் திருப்பாற்கடலில்

                        மங்களமாய் கடலன்னையுடனவதரித்த

                                            சரணம்
                        
                         திங்களும் ஞாயிறும் கங்கையும் வருணனும்

                         அங்கமாய் விளங்கிடும் ஓங்கார நாதம் தரும் (சங்காழ்வார்)
              

                        செங்கண்மால் கேசவன் பாரதப் போரில்

                        எங்கும்  முழக்கமிட்ட பெருமைக்குரிய   ( சங்காழ்வார் )



*பாஞ்சஜன்யம்*


பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த 

சங்கு தான்!


ஒரு சங்கில்  , உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்! 

மொத்தத்தில் ஐந்து சங்குகள்!

ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.


பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.


ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.


ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே 

ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.


வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.


சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.


சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். 


அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் !!


இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 




Friday, 22 August 2025

கற்பனைக்கெட்டாத…..

 


      

                                   கற்பனைக்கெட்டாத…..


                                                 பல்லவி

                               கற்பனைக்கெட்டாத அழகுடைய

                               கற்பக விநாயகனை தினம் துதித்தேன்

                                              அனுபல்லவி

                               சிற்பரன்  சிவன் மகனைக் கேசவன் மருகனை

                               மற்பொருள் திரள் புய  ஆனைமுகத்தோனை               

                                                 சரணம்                                

                              சொற்களால் வர்ணிக்க இயலாத வடிவுடைய

                              அற்புத உருவம் கொண்ட மகாகணபதியை

                               பற்பல கருமங்கள் விகற்பமின்றி நடைபெற 

                              விற்பன்னர் வேதியர்  பணிந்தேத்தும்