நாராயணனே……
பல்லவி
நாராயணனே முழுமுதற் கடவுள்
ஶ்ரீராமனுமவனே ஶ்ரீகிருஷ்ணனுமவனே
அனுபல்லவி
பேராயிரமுடைய சாரங்கபாணியவன்
ஆராவமுதன் அழகியமணவாளன்
சரணம்
தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதன்
காரார் குழலாள் ஶ்ரீ மகாலக்ஷ்மியை
மார்பினில் வைத்திருக்கும் வைகுண்டவாசன்
பாரோர் பணிந்தேத்தும் குறையில்லா கோவிந்தன்
*******
“ குறையில்லா கோவிந்தன் “
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள். அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா' என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா' என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்று சொல்லிப் போற்றுகிறார். அவதாரத்தில் கிருஷ்ணாவாதாரமே பிடிக்கும் என்பதுபோல், நாமங்களில் 'கோவிந்தா...' என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான் மாயக்கண்ணன்..
அந்தப் பெயரில் அப்படி என்னதான் உள்ளது ? 'கோவிந்தா' என்ற சொல் மட்டுமே அவனது பத்து அவதாரங்களையும் குறிக்கும்.
'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பாற்றுபவன். இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன் என்று பொருள். கோ என்பதற்கு வேதம் என்றும் பொருள். வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தையும் கோவிந்தம் குறிக்கிறது. கோ என்றால் பர்வதம் என்ற பொருளும் உண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவு ஊட்டுகிறது.
பூமியையும் கோ எனலாம். கோவிந்தா எனும்போது பூமியைத் தனது கொம்பினால் தூக்கிய வராக அவதாரமும் மனதில் தோன்றுகிறது. நரசிம்மனுக்கும், வாமனனுக்கும், பரசுராமனுக்கும் கோவிந்தன் என்பது மற்றுமொரு பெயரே. கோ என்றால் ஆயுதம். சமுத்திரத்து நீரைச் சரித்து பூமியைக் கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயராயிற்று.
கோ என்றால் பசு. பசுவை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்ற பெயராம்.
இப்படி, ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது. கோவர்த்தன மலையைத் தூக்கிய காரணத்தால் கண்ணனுக்கு கோவர்த்தனன் என்று பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்தான் இந்திரன்.
அப்படிப்பட்ட, ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனைத் தொழுது வணங்கினால், அவனது பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து வணங்கிய பலன் கிட்டும். இதையே 'குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் ஒன்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே..' என்று நம்மாழ்வார் பாடிட, அதனை நன்குணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும், கோவிந்த நாமாவளியைப் பாடி மகிழ்ந்திட இருபத்து எட்டாம் நாளன்று அழைக்கிறாள் ..!!