வணங்கினேன்…..
பல்லவி
வணங்கினேன் கணபதீச்சரத்தானை ஈசனை
தணலேந்தும் நெற்றிக்கண்ணனை சிவனை
அனுபல்லவி
கணங்களும் நந்தியும் நரர் சுரர் நான்முகனும்
கணபதியும் பணிந்திடும் கறைகொண்ட கண்டத்தானை
சரணம்
மணம் கமழும் சோலைகள் சூழ் திருச்செங்காட்டன்குடியில்
இணக்கமுடனருகிருக்கும் குழலம்மை நாதனை
உத்திராபதீச்வரனை கேசவன் நேசனை
இணையடி நிழலே சதமெனத் துதித்து
நறைகொண்ட மலர்தூவி
விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார்
முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ்
செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
கணபதீச் சரத்தானே.
🌺"நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்று அடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே."🌺
——(திருஞானசம்பந்தர் தேவாரம் : 01.061.01)
—
பொருளுரை : அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.
திருச்செங்காட்டங்குடி : கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி(ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப்பெயர் பெற்றது.