Saturday, 13 July 2024

தருந்துயரங்களை…..

தருதுயரம் தடாயேல்

உன் சரணல்லால்

சரணில்லை

விரை குழுவு

மலர்ப்பொழில் சூழ்

விற்றுவக் கோட்டம் மானே!

அரிசினத்தால் ஈன்றதாய்

அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைந்தே

அழுங்குழவி;

அதுவே போன்றிருந்தேனே.

பெருமாள் திருமொழி

ஐந்தாம் திருமொழி

குலசேகராழ்வார்


                                    தருந்துயரங்களை…..


                                                  பல்லவி

                               தருந்துயரங்களைத் தடை செய்திடவே

                               பெருமாளே கேசவனே உனையன்றி யாருளார்

                                               அனுபல்லவி 

                               கரும வினைப் பயன் நீங்க,வருமிடர் காத்திட,

                               பெரும் பிணி பவக்கடல் கடந்திடத்துணை நீயே

                                                  சரணம்

                              அருமைத் தாயருள் வேண்டி அழும் பிள்ளை போலவும்

                              அரசன் கோல் நோக்கி வாழும் குடி போலவும்

                              அருங்கலத்தின் கொடி மீதமர்ந்திருக்கும் பறவை போல்             

                              திருமாலே  வித்துவக்கோட்டம்மானே வேண்டுகிறேன் 



விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்விய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துக்கோடு என்றும், திருமிற்றக் கோடு என்றும் கூறுவர். 'விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். என் துன்பத்தை நீக்கா விட்டால் , தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், அரசனின் கோல் நோக்கி வாழும் குடி போலவும் உன் அருளையே எதிர்பார்த்து ஏங்கி இருப்பேன்!உன்னிடமன்றி வேறு யாரிடம் செல்ல முடியும்? விசாலமான கடலில் செல்லும் கப்பலின் பாய் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் பறவையைப் போல் வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை'என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச் சரணடைகிறார்.


                        


திருக்கோடிக்காவல் ……

அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே

அமரியெனும் மாயே பகவதி நீயே

அருள்புரிவாயே பைரவி தாயே

உன் பாதம் சரணமே

சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

சூலியெனும் உமையே குமரியே    


                         திருக்கோடிக்காவல் ……

                                  பல்லவி

                திருக்கோடிக் காவல் திரிபுரசுந்தரியின் 

                திருவடி பணிந்து மனமாரத்துதித்தேன்

                                     துரிதம்

                  திருமகள் கலைமகள் அரனயனரியும்

                  குரு நாரதரும் சுகசனகாதியரும்

                  சுரபதி நரர் சுரர் ரதிபதி அனைவரும்

                  கரம் பணிந்தேத்தும் பரமேச்வரியின்

                               அனுபல்லவி

                 இருவினையகற்றும் ஶ்ரீலலிதாம்பிகையின்

                 திருமால் கேசவன் அன்பு சோதரியின்

                                    சரணம்

                  கரும வினைப் பயனால் கட்டுண்ட என்னை

                  திருவுள்ளம் கொண்டு  விடுவிக்க வேண்டியும்

                  பெரும்  பிணி பவக்கடல்  கடந்திட எனக்கு

                  உறு துணையாயிருந்து அருள் புரிய வேண்டியும்



               

Sunday, 7 July 2024

கோவிந்தன்….

 

                                கோவிந்தன்…..


                                     பல்லவி

                கோவிந்தன் திருப்பாதம் வணங்கித்துதித்தேன்

                தேவி பத்மாவதியும் கோதையும் உடனிருக்கும்     

                                   அனுபல்லவி

                ஆவினங்கள் மேய்த்த கேசவன் மாதவன்

                பாவாணர் போற்றும் பரந்தாமன் வேங்கடவன்

                                        சரணம்

                தேவரும் சுகசனகாதியருமனுமனும்

                பூவிலமர் பிரமனும் சுதர்சனரும் மற்றும்

                விஷ்வக்சேனரும் அருகிருந்து

                சேவடி பணிந்தேத்தும் திருவேங்கடமுடையான்

                 

                 

                                        

போகமும் மோட்சமும்…..

 யத்ராஸ்தி போகோ ந ச தத்ர மோக்ஷ:

யத்ராஸ்தி மோக்ஷோ ந ச போக: |

ஶ்ரீ ஸுந்தரீ ஸாதக புங்கவானாம் போகஸ்ச

மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ 

எங்கே போகமுள்ளதோ அங்கே மோக்ஷமில்லை!! எங்கே மோக்ஷமுள்ளதோ அங்கே போகமில்லை!!  ஆனால் "ஸ்ரீ ஸுந்தரீ" எனும் லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீயான அம்பாளை உபாஸிக்கும் ஸ்ரீ வித்யோபாஸகனுக்கு  போகமும் மோக்ஷமும் ஒருசேர்ந்து  அனுக்ரஹிக்கிறாள் பரதேவதை!! 

ஜய ஜகதம்ப ஸிவே

ஜய ஜய காமாக்ஷி!!

போகத்தைத் தரும் மார்க்கங்கள் மோக்ஷத்தைத் தருவதில்லை. மோக்ஷத்தைத் தரும் இதர யோகாதி மார்க்கங்கள் போகத்தைத் தருவதில்லை.


                                           போகமும் மோட்சமும்…..


                                                     பல்லவி

                                        போகமும் மோட்சமும் இரண்டுமே தருவாள் 

                                        ஆகம வேதகலாமய சுந்தரி

                                                  அனுபல்லவி

                                        தேகளீசப் பெருமாள் கேசவன் சோதரி

                                        மூகசங்கரர் துதித்த ஈச்வரி

                                                      சரணம்

                                        போகமுள்ள இடத்தில் மோக்ஷமில்லை பக்தி

                                        யோகமுள்ள இடத்தில் போகமில்லை

                                        சாகசம் நிறைந்த ஶ்ரீலலிதம்பிகையை

                                        வேகமுடன் உபாசிக்கும் தூய பக்தனுக்கு

 




Tuesday, 25 June 2024

ஆயர் குலத்துதித்த…..

 


      ஆயர் பாடி  ஆக்கள் மயங்க

......அத்தன் அம்மை அண்டர் மயங்க

வாயு மைந்தன் வாழ்த்தி வணங்க

......விண்ணில் வெய்யோன் வெம்மை தணிக்க

நேயம் மிக்கோர் நெஞ்சங் களிக்க

........சீய ரெல்லாம் சீவன் ஒடுங்க

மாயக் கூத்தன் மேக நிறத்தோன்

......வேய  லேந்தி  கான மிசைத்தான் 


அத்தன் அம்மை -  தந்தை, தாய்

அண்டர்  -   இடையர்

வெய்யோன் - சூரியன்

(பாடல் அடியேன்)    



                         ஆயர் குலத்துதித்த…..


                                        பல்லவி

                       ஆயர் குலத்துதித்த மாயக் கண்ணன்

                       வேய்ங்குழுலூதி கானமிசைத்தான்

                                     அனுபல்லவி

                       சாயக் கொண்டையும் பீலியுமாட

                       காயாம்பூ வண்ணன் கேசவன் மாதவன்

                                          சரணம்

                       நேயமுடன் ஆயர் குலத்தோருமாக்களும்

                       தாயும் தந்தையுமகிலமும் மயங்கிட

                       வாயுமைந்தன் வாழ்த்தொலி முழங்க

                       தூயவர்  விண்ணர் மண்ணவர் மகிழ்ந்திட    

          

                           

                     

                     



           

                

Monday, 17 June 2024

தேவ தேவனே…….

 


                                  தேவ தேவனே…….


                                          பல்லவி

                                தேவ தேவனே பத்மநாபனே

                                சேவடி பணிந்தேன் எனக்கருள்புரிவாய்

                                        அனுபல்லவி

                                ஆவினங்கள் மேய்த்த கேசவனே

                                புவனம் மூன்றையுமாளும் நாராயணனே

                                             சரணம்

                                தேவி திருமகளை திருமார்பில்  வைத்திருக்கும்

                                கோவிந்தனே அனந்தபுரம் வளர் ஶ்ரீதரனே

                                தூவி மலர் சொரிந்து உனைச்சரணடைந்து

                                கூவியழைத்தே உனைத் துதித்தேன்

                                

                                        

Tuesday, 4 June 2024

தாரி தேவியின்……

 


தாரி தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – தாரி தேவி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் (Garhwal) பகுதியில் அலக்நந்தா நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீநகர் – பத்ரிநாத் ஹைவேயில் உள்ள கல்யாசார் (Kalyasaur) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் உத்தரகண்ட் மாநில ஸ்ரீநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், ருத்ரபிரயாக்கில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 360 கி.மீ தொலைவிலும் உள்ளது.



                   தாரி தேவியின்……

 

                                           பல்லவி

                          தாரி தேவியின் பதமலர் பணிந்தேன் 

                          பாரில் புகழுடன் வீற்றிருப்பவளை

                                         அனுபல்லவி

                         கோரின வரம் தரும் கேசவன் சோதரி

                         சீரிய தோற்றமும் அழகுமுடையவள்

                                            சரணம்

                          கார்வண்ண மேனியள் கருணா மூர்த்தி

                          பாலையாய்க் காலையில் குமரியாய் மாலையில்

                          முதியவளாய் இரவில் காட்சியளிப்பவள்

                          கதியவள் பதமென மனமாரத்துதித்து