சரணடைந்த பின்னும்......
பல்லவி
சரணடைந்த பின்னும் சோதித்தல் தகுமோ
பரம்பொருளே ஶ்ரீராமா பவ வினைகள் களைந்தருள்வாய்
துரிதம்
சுரபதி நரர்சுரர் சுகசனகாதியர்
ரதிபதி சரச்வதியின் பதி துதித்திடும்
அதிபதி நீயே அனைத்தும் நீயே
கதியென உனையே அபயம் அபயமென
அனுபல்லவி
கரதூஷணாதியரை கபந்தனை விராதனை
அரக்கன் சுபாகுவை அழித்த கேசவனே
சரணம்
மரவுரி தரித்து கானகம் சென்றவனே
குரங்கரசன் சுக்ரீவன் நட்பின் காரணமாய்
மரத்தின் மறைவில் நின்று வாலியைக் கொன்றவனே
அரசாபம் தீர்த்தவனே ஆதவகுலத்தோனே
மரவுரி தரித்து கானகம் சென்றவனே
மங்கை திரௌபதியின் மானம் காத்தவனே
திங்கள் திருமுகத்தோனே தீனசரண்யனே
பங்கய நாபனே கோசலை மைந்தனே
புரமெரித்த பரமன் சிவனும் போற்றும்
ஶ்ரீரகுராமனே ரகுகுல திலகனே
பரசுராமனின் கர்வம் தொலைத்தவனே
பாரோர் புகழ்ந்தேத்தும் பட்டாபிராமனே
சேதுக்கரையமைத்த சேதுராமனே
மாது சபரிக்கு மோட்சமளித்தவனே
வேதங்கள் போற்றும் கோதண்டராமனே
பாதம் பதித்து நங்கை சாபம் தீர்த்தவனே
சீதையின் நாயகனே சிவதனுசை முறித்தவனே
தந்தை சொல் காத்த தயரதன் மைந்தனே
சோமசுந்தரரும் பார்வதிக்கெடுத்துரைத்
நாமங்களில் சிறந்த ராம நாமமுடையவனே
No comments:
Post a Comment